Education

BackgroundEducationTamilnadu

பள்ளிகளில் இனி ஆசிரியர், மாணவர்களுக்கு தனித்தனி கழிவரைகள் இல்லை

இரண்டாவது தேசிய இயற்கை மருத்துவ தினம் மற்றும் யோகா இயற்கை மருத்துவ முகாம் காரைக்காலில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை இன்று புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரும், கல்வி அமைச்சருமான இரா.கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலக்கண்ணன், மாணவர்கள் தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்த water bell திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் இதனால் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறினார். இதேபோல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கென தனியாக கழிவரைகள் இருக்கக் கூடாதென கூறிய அவர், மாணவர்களின் கழிவரைகளையே ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டுமென்றும் அப்போதுதான் மாணவர்களின் கழிவரைகளும் சுகாதாரமாக இருக்கும் என்றார்.

நியூசு விமர்சனம்:

அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர்களுக்கு தனித்தனி கழிவரைகள் உள்ளன. இதில் பலவற்றில் ஆசிரியர் கழிவரைகள் சுகாதாரத்துடனும், மாணவர் கழிவரைகள் சுகாதாரம் இன்றியும் இருப்பதை காண முடியும். காரணம், கேள்வியெழுப்பும் அதிகாரம் படைத்த தலைமை ஆசிரியரும் ஆசிரியர் கழிவரையை தான் பயன்படுத்துவார். இந்த நிலையில் அனைவருக்கும் ஒரே கழிவரை என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். புதுச்சேரி அரசை போல் தமிழகத்திலும் இந்த முறை பின்பற்றப்பட வேண்டும்.

EducationTamilnadu

5, 8-ம் வகுப்பு PUBLIC EXAM-ல் பெயில் ஆனாலும் பாஸ் தான் – அமைச்சர்

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும், 5-ம் வகுப்புக்கு 3 பாடங்களும், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்கள் என்கிற விதத்தில் நடக்கவுள்ள பொதுத்தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்குவதற்கான ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, மாணவர்களின் வளர்ச்சிக்காக வாங்கப்பட்ட பொருட்கள், மின்னணு சாதனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் முடக்கி வைத்திருப்பது ஏன், என கேள்வி எழுப்பினார். கல்வி அலுவலர்கள், தங்களது பணியை ஒழுங்காக செய்தாலே, தமிழகம் பள்ளிக்கல்வியில் நாட்டில் முதலிடத்துக்கு வந்துவிடும், என்றார்.

கல்வி அலுவலர்களின் பணியைக் கண்காணிக்கவே ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது, என்றார். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க, முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து உரிய கவனம் செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கும் விரைவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். அரசுப்பள்ளிகளில் படித்து நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களுக்கு கடிதம் எழுதி, பள்ளிகளுக்கு உதவுமாறு மாணவர்களுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு, முன்னாள் மாணவர்கள் உதவினால், அரசுப்பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அரசு செலவில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

தனியார் பள்ளிகளில் CCTV சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் CCTV பொருத்தப்பட்டுள்ளதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ரூ.26.40 கோடி செலவில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் இசை, ஓவியம், நடனப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், இசை, ஓவியம் மற்றும் நடனப்பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் Skill Training பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 500 ஆடிட்டர்கள் மூலம் பட்டயக்கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் தொழிற்கல்விக்கான பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல் 5-க்கும் குறைவாக மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள். இதற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை அரசுக்கு செலவாகிறது. இதன் காரணமாக, 5 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுத்து, அவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம், கணிதப்பாடங்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாளை தேர்வுத்துறை தயாரித்து அனுப்பும். முதல் 3 ஆண்டுகளுக்கு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும். 5-ம் வகுப்புக்கு 3 பாடங்களுக்கும், 8-ம் வகுப்புக்கு 5 பாடங்களுக்கும் பொதுத்தேர்வு அவரவர் பள்ளியிலேயே எழுதலாம் எனவும் கூறினார்.

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும். முன்னாள் மாணவர்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் அரசுப்பள்ளிகளுக்கு நிதி வழங்கலாம். வெளிநாடுகளில் வசிப்போர் நிதி வழங்குவதுடன், அவர்கள் வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு நபரையும் நியமிக்கலாம். இதுவரை, தனியார் நிறுவனங்கள் மூலம் ரூ.128 கோடி அரசுப்பள்ளிகளுக்கு நிதியாக வந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் ஒரு மாதத்துக்கு குறைந்தது 20 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர் 30 பள்ளிகளையும், வட்டாரக்கல்வி அலுவலர் 60 பள்ளிகளையும் ஒரு மாதத்துக்கு ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.

Educationpoemsociety

மதநோய்க்கு மரணங்கள் தான் மாத்திரையா? #JusticeforFathima

முழு விபரத்துக்கு:

ஒரு முஸ்லிம் முதல் மார்க் எடுப்பதா? – சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தின் பகீர் பின்னணி

https://www.newsu.in/?p=3767

மாணவி உயிர்பறித்த மதவெறி – IIT-ஐ முற்றுகையிட்ட மாணவர் அமைப்பு

https://www.newsu.in/?p=3779

தமிழ்நாடு பாதுகாப்புன்னு நம்பி அனுப்புனோம்… மதவெறில கொன்னுட்டாங்க – கதறும் பாத்திமாவின் தாய்

https://www.newsu.in/?p=3786

பாத்திமா மரணத்துக்கு காரணம் என கூறப்படும் IIT பேரா.சுதர்ஷன் ஒரு சங்கி (வீடியோ ஆதாரம்)

https://www.newsu.in/?p=3793

BackgroundcrimeEducationTamilnadu

பாத்திமா மரணத்துக்கு காரணம் என கூறப்படும் IIT பேரா.சுதர்ஷன் ஒரு சங்கி (வீடியோ ஆதாரம்)

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் சுதர்சன் பத்மநாபன் அவர்களின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. தொடர்ந்து, தான் மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் அந்த குறிப்பில் முதலில் இடம்பெற்ற பெயர் இணை பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபன்.

இவரைப்பற்றி நமது நியூசு குழு பல்வேறு தரப்பிடம் விசாரித்ததுடன், இணையதளத்திலும் அவர் குறித்து தேடினோம். அப்போது, ஐஐடி மாணவி பாத்திமா மரணத்துக்கு காரணமானவர் என குற்றம்சாட்டப்படும் பேரா.சுதர்ஷன் பத்மநாபன் தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் திராவிடத்துக்கு எதிரான கருத்துக்களையும், வலதுசாரி இந்துத்துவ ஆதரவு கருத்துக்களையும் பேசி வந்துள்ளார். குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு ஸ்வதேசி இண்டாலஜி என்ற வலதுசாரி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கிய பத்மநாபன் திராவிட அரசியலை விமர்சித்துள்ளதுடன், சன் டிவி போன்ற தமிழ் ஊடகங்கள் திராவிட கட்சிகளின் சார்புடன் நடந்து கொள்வதாக கூறியுள்ளார்.

வீடியோ ஆதாரம் : https://youtu.be/mVOad19GbfY?t=4176

ஐ.ஐ.டி. இணையதளத்தில் சுதர்ஷன் பற்றி: https://hss.iitm.ac.in/team-members/sudarsan-p/

EducationTamilnadu

தமிழ்நாடு பாதுகாப்புன்னு நம்பி அனுப்புனோம்… மதவெறில கொன்னுட்டாங்க – கதறும் பாத்திமாவின் தாய்

ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு.

“எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.

பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.
சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.

அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?

ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்த வருடம் 5நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை. இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை.”

EducationhiddenTamilnadu

மாணவி உயிர்பறித்த மதவெறி – IIT-ஐ முற்றுகையிட்ட மாணவர் அமைப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் சுதர்சன் பத்மநாபன் அவர்களின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. தொடர்ந்து இந்த மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாத்திமா லத்தீப் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பினர் ஐ.ஐ.டி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வேண்டும் வேண்டும் பாத்திமாக்கு நீதி வேண்டும் இது போன்ற மரணங்கள் இனி வரக்கூடிய காலங்களில் நிகழாமல் அரசு தடுத்திட வேண்டும் என்று அவர் முழக்கத்தை முன் வைத்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் பாத்திமா மரணத்திற்கு காரணமாக இருப்பவர்களை உடனடியாக ஐஐடி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினர்.

EducationPoliticsTamilnadu

சென்னை IIT மாணவி பாத்திமா மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை ஐ.ஐ.டி மாணவி
விடுதியில் தற்கொலை
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் சுதர்சன் பத்மநாபன் அவர்களின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து இந்த மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துள்ளது நெஞ்சை உலுக்குகிறது.

சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அப்புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மறுத்து கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், புகார் கொடுத்த பெற்றோரிடம் காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

மாணவி தற்கொலை குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், பெற்றோரை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான செயலாகும். காவல்துறையினரின் இந்த அராஜகப்போக்கினை வன்மையாக கண்டிப்பதுடன், அவர்கள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பாகுபாடு காட்டப்படுவது தொடர்ந்து நீடித்து வருவதாகவே தெரிகிறது. இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தகைய மோசமான பாகுபாடான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐந்துபேர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர். இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் இதுவரை எந்தவிதமான முறையான விசாரணையோ, நடவடிக்கையோ மேற்கொள்ளாதது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக காவல்துறை இதுகுறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் இத்தகைய சம்பவங்கள் இனிமேல் இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் தொடராத வண்ணம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

– கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

BackgroundcrimeEducationTamilnadu

ஒரு முஸ்லிம் முதல் மார்க் எடுப்பதா? – சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தின் பகீர் பின்னணி

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர்
பாத்திமா லதீப் (18). சென்னை ஐஐடியில் M.A. Humanities முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள சராயூ பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த அவர் சில நாட்கள் முன்பாக விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பேராசிரியரின் மத துன்புறுத்தல் காரணமாகவே மாணவி மர்மமான உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது…

“சென்னை ஐஐடியில் முதல் ஆண்டு முதுகலை வகுப்பில் பயின்று வந்த கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த சனிக்கிழமை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதி அறையில் மர்மமாக உயிர் இழந்தது பெரும் வேதனை அளிக்கின்றது. தனது துறையில் இணைப் பேராசிரியராக உள்ள சுதர்சன் பத்மனாபன் தான் தனது மரணத்திற்குக் காரணம் என்று அவர் தனது தற்கொலைக் குறிப்பை கைப்பேசியில் பதிவிட்டுள்ளார்.

மாணவி பாத்திமா அறிவாற்றலில் சிறந்து விளங்கியவர் ஆவார். இதன் காரணமாக ஐஐடி நடத்திய நுழைவுச் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவது மாணவியாகத் தேர்வாகி ஐஐடியில் முதுகலை மானிடவியல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். வகுப்பிலும் அவர் முதல் மாணவியாகத் திகழ்ந்தார் என்று அவரது துறை பேராசிரியர்களே குறிப்பிட்டுள்ளார்கள். மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் என்னிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து கொள்ளும் வகையில் அவர் கோழையாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.
சாதிரீதியான மதரீதியான பாரபட்சத்தைப் பேராசிரியர் தரப்பில் பாத்திமா எதிர்கொண்டார் என்றும் தனது பெயர் முஸ்லிமாக இருந்தே அங்கு பிரச்சினையாக இருப்பதாகத் தனது மகள் குறிப்பிட்டதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு தேர்விலும் ஒரு முஸ்லிம் மாணவி முதலிடம் பெறுவது அங்குள்ள பலருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் அப்துல் லத்தீப் குற்றஞ்சாட்டியுள்ளார். பேராசிரியர் சுதர்சன் பத்மாநாபன் எடுக்கும் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டதையும் அதனை துறைத் தலைவரிடம் அவர் புகார் அளித்து திருத்தப்பட்டதையும் அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாகச் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பெரும் வேதனையை அளிக்கிக்னறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு, அவரது மரணத்திற்குக் காரணமான சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்டோரை கைது செய்து விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன்.” என்றார்.

EducationhiddenIndia

கும்பலாக காப்பியடித்து மாட்டிக்கொண்ட பீகார் கல்லூரி மாணவர்கள்

பீகார் மாநிலத்தில் பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வில் கும்பலாக காப்பி அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டியா நகரில் உள்ள ராம் லகான் சிங் பேட்டியா கல்லூரியில், மாணவர்கள் தேர்வில் பார்த்து எழுதும் விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கல்லூரி முதல்வர், கல்லூரியில் தேர்வு எழுத அளவுக்கு அதிகமான மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் ஒதுக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது கல்லூரில் 2,500 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதமட்டுமே இடம் உள்ள நிலையில், 5,000 மாணவர்கள் கல்லூரியில் தேர்வெழுத அனுப்பப்பட்டதால் பலர் தரையில் அமர்ந்து தேர்வு எழுதியதாக அவர் கூறியுள்ளார். முதல்வர் இவ்வாறு விளக்கமளித்தாலும் மாணவர்கள் காப்பியடிப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட மேலும் பல கல்லூரிகளில் மாணவர்கள் காப்பியடித்து தேர்வெழுதியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே பீகார் மாநிலத்தில் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி காப்பியடித்து தேர்வெழுதியதாக புகார் எழுந்தநிலையில், அவருக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. அதில் அந்த மாணவி தோல்வியடைந்தார். மேலும் அங்கு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெற்றோர்களே கல்லூரிக்கு சென்று புத்தகங்களை வழங்கும் வீடியோ அனைத்தும் வைரலானது. தரமான பட்டதாரிகளை உருவாக்கும் தமிழக கல்வி நிறுவனங்கள் மீதே வட நாட்டவர்கள் விமர்சனம் செய்துவரும் சூழலில், வடமாநிலமான பீகாரின் கல்வி நிலை இவ்வளவு கேவலமாக உள்ளதற்கு இது ஒரு உதாரணம்.

Educationfact checkTamilnadu

மாணவர்களை மதரீதியில் அணி திரட்டுவதை தடுக்க அரசு உத்தரவிட்டது உண்மையா?

பரவும் செய்தி:

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயர்களில் மாணவர்கள் அணிதிரட்டுப்படுவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக உத்தரவு நகலுடன் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

செய்தியின் தன்மை:

பள்ளிக்கல்லூரிகளில் மாணவர்கள் மத, சாதி ரீதியாக அணி திரட்டப்படுவதும், சிறுபான்மை, தலித்துகளுக்கு எதிராக வெறுப்புணர்வு தூண்டப்படுவதும் உண்மை தான். இது குறித்து நமது தளத்தில் கூட

“தமிழக பள்ளிகளில் அரசு ஆதரவுடன் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் ஆர்.எஸ்.எஸ்!”

என்ற செய்தியை வெளியிட்டோம். ஆனால், இதனை தடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாக வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசியது:

-file image

சென்னைஅண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு கூடத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “மாணவர்களை மத ரீதியாக குழு அமைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மூலம் எந்த கடிதமும் அனுப்படவில்லை. பள்ளிக்கல்விதுறை அனுப்பினால் மட்டுமே முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டும். பள்ளிக்கல்வி துறை மூலம் எந்த சுற்றறிக்கை அனுப்பபட்டாலும் முதலமைச்சர் ஒப்புதல் இல்லாமல் வெளிவராது” என்றார்.

நியூசு விமர்சனம்:

மாணவர்கள் சாதி, மத ரீதியில் பிரிக்கப்படுவது, சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் வண்ண கயிறுகள் கட்டுவது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை எந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதுபோன்று பொய்யான செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தும் சமயத்திலாவது அமைச்சர் சற்று சுதாரித்துக்கொண்டு, சாதி, மத ரீதியில் மாணவர்களை அமைப்புகள் பிரித்தால் புகாரளிக்கலாம் என சொல்லி இருக்கலாம். ஆனால், அதை அப்படியே மறுத்துவிட்டு கடந்துவிடுவது என்பது பள்ளிகள் இதுபோன்ற தவறான செயல்கள் நடக்கவே இல்லை என்பதை போல் காட்டுகிறது.

1 2 3
Page 1 of 3