Background

BackgroundEducationTamilnadu

பள்ளிகளில் இனி ஆசிரியர், மாணவர்களுக்கு தனித்தனி கழிவரைகள் இல்லை

இரண்டாவது தேசிய இயற்கை மருத்துவ தினம் மற்றும் யோகா இயற்கை மருத்துவ முகாம் காரைக்காலில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை இன்று புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரும், கல்வி அமைச்சருமான இரா.கமலக்கண்ணன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலக்கண்ணன், மாணவர்கள் தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்த water bell திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் இதனால் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறினார். இதேபோல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கென தனியாக கழிவரைகள் இருக்கக் கூடாதென கூறிய அவர், மாணவர்களின் கழிவரைகளையே ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டுமென்றும் அப்போதுதான் மாணவர்களின் கழிவரைகளும் சுகாதாரமாக இருக்கும் என்றார்.

நியூசு விமர்சனம்:

அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர்களுக்கு தனித்தனி கழிவரைகள் உள்ளன. இதில் பலவற்றில் ஆசிரியர் கழிவரைகள் சுகாதாரத்துடனும், மாணவர் கழிவரைகள் சுகாதாரம் இன்றியும் இருப்பதை காண முடியும். காரணம், கேள்வியெழுப்பும் அதிகாரம் படைத்த தலைமை ஆசிரியரும் ஆசிரியர் கழிவரையை தான் பயன்படுத்துவார். இந்த நிலையில் அனைவருக்கும் ஒரே கழிவரை என்ற திட்டத்தின் மூலம் மாணவர்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். புதுச்சேரி அரசை போல் தமிழகத்திலும் இந்த முறை பின்பற்றப்பட வேண்டும்.

BackgroundPoliticsTamilnadu

உள்ளாட்சித் தேர்தல் நெருங்குதுல… இந்த வருசமும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபா இருக்கு

பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகையாக ₹1,000 வழங்குவற்கு, ₹2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பாக தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, இரண்டு அடி கரும்பு மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான முந்திரி பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியது.

இந்த ஆண்டும் பரிசு தொகை வழங்க 2363 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறும் ரேசன் அட்டைகளாக ஆன்லைன் மூலம் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதற்காகவும் கூடுதலாக 100 கோடிரூயாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நியூசு விமர்சனம்:

தமிழக அரசால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் மக்களவை தேர்தலில் ஓட்டுப்போடும் மக்களுக்கு பணம் கொடுப்பதற்காக தான் என விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை கவர்வதற்காக இந்த ஆண்டும் ₹1,000 நிதியுதவி வழங்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசின் கடன் பன்மடங்கு அதிகரித்துள்ளதுடன், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, வைப்பு நிதி வழங்கக்கூட பணம் இல்லை என அரசு கைவிரிக்கும் நிலையில், இந்த ₹2,363 கோடி செலவு தேவைதானா என்ற கேள்வி எழாமல் இல்லை.

BackgroundMedia CriticsTamilnadu

ஐஐடி மாணவி பாத்திமா மரணம்: நியூஸ் 7 டிவியின் பிராமண சார்பு கேள்வி நேரம் நிகழ்ச்சி!

நேற்று நியூஸ் 7 டிவியில் ஐஐடி மெட்ராஸில் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப் குறித்துத்தான் பிரதான விவாதம் இருந்தது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்களில் ஒருவர் பிராமணியத்தை ஆதரிக்கும் சங்கப்பரிவார அமைப்பைச் சாரந்தவர். அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் அமர்ந்திருந்தார். அவர் முன்வைத்த கருத்துக்கள் யாவும் அப்பட்டமான உயர்சாதி மனோபாவத்தின் வெளிப்பாடுதான். லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஊடகத்தில் ஒரு பிராமண பேராசிரியரைப் பற்றி எப்படி அவதூறாக பேசலாம், குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அவரது பெயரை எப்படி வெளிப்படுத்தலாம் என்கிற தொனியில் அவரது வாதம் இருந்தது. மேலும் ஃபாத்திமாவிற்கு நீதி வேண்டிய நடத்தப்படும் பிரச்சாரம் என்பது ஒருவரை குற்றப்படுத்தும் வெறுப்பு பிரச்சாரம் என்றார்.

விவாதத்தில் கலந்துகொண்ட மற்ற பங்கேற்பாளர்கள் கல்வி நல ஆர்வலர்கள். அவர்கள் நவீன கால கல்விமுறையின் மனழுத்தங்கள் குறித்தும், உணர்வுப்பூர்வமாக அணுகத்தெரியாத பெற்றோர்களால் உருவாக்கப்படும் பலவீனமான மாணவர்கள் குறித்தும் , அவர்களின் தற்கொலைகள் குறித்தும் விவாதித்தது கொண்டிருந்தார். ஃபாத்திமாவிற்கு நீதி வேண்டியோ, அல்லது பிராமண சங்கியின் கருத்தினை மறுத்து பேசவோ அங்கே எந்தவொரு பிரதிநிதித்துவம் இல்லை. இதைவிட கொடுமை என்னவெனில் நெறியாளர் பிராமண ஆதரவாளரின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக மற்ற பங்கேற்பாளர்களையும் அவரின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது நீ்ங்களும் ஏற்பீர்கள்தானே என்கிற ரீதியில் ஒப்புக்கொள்ள கோருகிறார்.

ஊடகங்களிடையே வளர்ந்து வரும் மற்றொரு ஒருமித்த முடிவு என்னவெனில் இந்துத்துவ மதவெறி , சங்கப்பரிவார பயங்கரவாதி, மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு பிராமணர்கள் போன்றோரை இந்துத்துவ வன்முறை சார்ந்த பிரச்சினைகளுக்கு பங்கேற்பாளர்களாக கொண்டுவருவதின் மூலம் நடுநிலையாகவும், நியாயமாகவும் விவாதத்தை கட்டமைக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர். இந்துத்துவ வன்முறை குறித்த விவாதங்களில் முஸ்லிம் தரப்பு பிரதிநிதித்துவத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதில்லை. அதற்கு பதிலாக பெரியார் சிந்தனையாளர்களை அழைப்பது போதுமானதென ஊடகங்கள் நினைக்கின்றன. இப்பொழுது பெரியாரியவாதிகளை அழைப்பதும் அரிதாகிவிட்டது. விவாதங்கள் ஒருபக்கமாகவே கட்டமைக்கப்படுகின்றன. ஒருபுறம் இந்துத்துவ தீவிரத்தன்மையுள்ளவரெனில் , மற்றொரு புறம் சங்கப்பரிவாரம் அல்லாத தீவிரத் தன்மையுள்ளவர் அல்லது கருத்தியல் தொடர்பு இல்லாதவர்கள் அல்லது ஒரு திமுக, அல்லது ஒரு சி.பி.எம் என இருக்கிறது. இவர்களது விவாதங்களும் கூட கருத்தியல் தொடர்பு இல்லாமல் மதிப்பற்றதாக மாறிவிடுகிறது.

ஆங்கிலம் : உமர் ஃபாருக்
தமிழில் : அஹ்மது யஹ்யா அய்யாஷ்

BackgroundcrimeEducationTamilnadu

பாத்திமா மரணத்துக்கு காரணம் என கூறப்படும் IIT பேரா.சுதர்ஷன் ஒரு சங்கி (வீடியோ ஆதாரம்)

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் சுதர்சன் பத்மநாபன் அவர்களின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. தொடர்ந்து, தான் மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் அந்த குறிப்பில் முதலில் இடம்பெற்ற பெயர் இணை பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபன்.

இவரைப்பற்றி நமது நியூசு குழு பல்வேறு தரப்பிடம் விசாரித்ததுடன், இணையதளத்திலும் அவர் குறித்து தேடினோம். அப்போது, ஐஐடி மாணவி பாத்திமா மரணத்துக்கு காரணமானவர் என குற்றம்சாட்டப்படும் பேரா.சுதர்ஷன் பத்மநாபன் தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் திராவிடத்துக்கு எதிரான கருத்துக்களையும், வலதுசாரி இந்துத்துவ ஆதரவு கருத்துக்களையும் பேசி வந்துள்ளார். குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு ஸ்வதேசி இண்டாலஜி என்ற வலதுசாரி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கிய பத்மநாபன் திராவிட அரசியலை விமர்சித்துள்ளதுடன், சன் டிவி போன்ற தமிழ் ஊடகங்கள் திராவிட கட்சிகளின் சார்புடன் நடந்து கொள்வதாக கூறியுள்ளார்.

வீடியோ ஆதாரம் : https://youtu.be/mVOad19GbfY?t=4176

ஐ.ஐ.டி. இணையதளத்தில் சுதர்ஷன் பற்றி: https://hss.iitm.ac.in/team-members/sudarsan-p/

BackgroundPoliticssocietyTamilnadu

சாக்கடை அள்ள கூட மெசின் இல்லாமல் சாகும் உயிர்கள்… EXPRESS AVENUEவில் அம்பலமான நாட்டின் இழிநிலை!

நாகரீக வளர்ச்சியிலும் கழிவுநீர்த்தொட்டி காவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ கீழ்தளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்காக ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அருண்குமார் ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் என்ற நான்கு நபர்களை அழைத்துக்கொண்டு சென்று உள்ளார்.

இதில் ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவருடைய அண்ணன் அருண்குமார், ரஞ்சித் குமாரை காப்பாற்றுவதற்கு கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார்.

மயக்கம் அடைந்தவரை சாதூர்யமாக தேடி மேலே தூக்கி விட்ட அருண்குமார், விஷவாயுவின் கோரத்தால் கழிவுநீர் தொட்டியிலேயே உயிரிழந்தார்.

பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருண்குமாரின் உடலை பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்டு வழக்கம்போல உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்பு பணிகளை செய்ய அனுமதியளித்த வணிக வளாகம், மனித கழிவை அகற்றும் மனிதர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தியிருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.

துப்புரவு பணிகளின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என அரசும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற சில வணிக வளாகங்கள் இதில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது….

நஷ்ட ஈடின் மூலம் குறைந்தபட்சம் அருண்குமாரின் குடும்பத்திற்காவது எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற வணிக வளாகங்கள் பதில் கொடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆய்வுப்படி சென்னையில் மட்டும் கழிவுநீர்த்தொட்டியில் 144 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக பேனர் பலி, ஆழ்துளை பலிகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கூட கழிவுநீர்த்தொட்டியின் கணக்கற்ற பலிகளுக்கு மேற்கொள்ளப்படவில்லை என்பதே பெரும் வேதனை.

இது அரசு இயந்திரம் எதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது?

BackgroundcrimeEducationTamilnadu

ஒரு முஸ்லிம் முதல் மார்க் எடுப்பதா? – சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தின் பகீர் பின்னணி

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர்
பாத்திமா லதீப் (18). சென்னை ஐஐடியில் M.A. Humanities முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள சராயூ பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த அவர் சில நாட்கள் முன்பாக விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பேராசிரியரின் மத துன்புறுத்தல் காரணமாகவே மாணவி மர்மமான உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது…

“சென்னை ஐஐடியில் முதல் ஆண்டு முதுகலை வகுப்பில் பயின்று வந்த கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த சனிக்கிழமை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதி அறையில் மர்மமாக உயிர் இழந்தது பெரும் வேதனை அளிக்கின்றது. தனது துறையில் இணைப் பேராசிரியராக உள்ள சுதர்சன் பத்மனாபன் தான் தனது மரணத்திற்குக் காரணம் என்று அவர் தனது தற்கொலைக் குறிப்பை கைப்பேசியில் பதிவிட்டுள்ளார்.

மாணவி பாத்திமா அறிவாற்றலில் சிறந்து விளங்கியவர் ஆவார். இதன் காரணமாக ஐஐடி நடத்திய நுழைவுச் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவது மாணவியாகத் தேர்வாகி ஐஐடியில் முதுகலை மானிடவியல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். வகுப்பிலும் அவர் முதல் மாணவியாகத் திகழ்ந்தார் என்று அவரது துறை பேராசிரியர்களே குறிப்பிட்டுள்ளார்கள். மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் என்னிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து கொள்ளும் வகையில் அவர் கோழையாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.
சாதிரீதியான மதரீதியான பாரபட்சத்தைப் பேராசிரியர் தரப்பில் பாத்திமா எதிர்கொண்டார் என்றும் தனது பெயர் முஸ்லிமாக இருந்தே அங்கு பிரச்சினையாக இருப்பதாகத் தனது மகள் குறிப்பிட்டதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு தேர்விலும் ஒரு முஸ்லிம் மாணவி முதலிடம் பெறுவது அங்குள்ள பலருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் அப்துல் லத்தீப் குற்றஞ்சாட்டியுள்ளார். பேராசிரியர் சுதர்சன் பத்மாநாபன் எடுக்கும் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டதையும் அதனை துறைத் தலைவரிடம் அவர் புகார் அளித்து திருத்தப்பட்டதையும் அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாகச் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பெரும் வேதனையை அளிக்கிக்னறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு, அவரது மரணத்திற்குக் காரணமான சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்டோரை கைது செய்து விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன்.” என்றார்.

BackgroundfarmershealthTamilnadu

தமிழக பாலை குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தரும் ஆய்வு

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பாலின் தரத்தை ஆராய நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டது. அதில், தமிழகத்தைப் பொறுத்தவரை 114 நகரங்களில் 551 பால் மாதிரிகள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் தீவணங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் நாம் அதிர்ச்சியடையக்கூடிய செய்தி என்னவென்றால், தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 88 பால் மாதிரிகளில் ‘அப்லாடாக்ஸின் எம்1’ என்ற வேதிப்பொருளின் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் இருப்பது தெரியவந்தது.
‘அப்லாடாக்ஸின் எம்1’ வேதிபொருள் தீவனங்கள் மூலம் பாலில் கலப்பதாக கூறப்படுகிறது. தீவனத்தில் பூஞ்சைகள் இருந்தால் அவை மாடுகளின் கல்லீரலில் ‘அப்லாடாக்ஸின் பி1’ ஆக சேர்ந்து பாலில் கலந்து ‘அப்லாடாக்ஸின் எம்1’ ஆக மாறும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வேதிப்பொருள் கலந்த பாலை அடிக்கடி அருந்தினால் புற்றுநோய் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின், கால்நடைப் பல்கலைக்கழகம் மற்றும் சில ஆய்வு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.

நியூசு தமிழ்:

கார்ப்பரேட் சதி, அரசியல்வாதிகளின் பண வெறியால் தமிழகத்தில் வேளான் விவசாயம் அடிமட்டத்துக்கு சென்று அழியும் சூழலில் சிக்கித்தவித்து வருகிறது. ஆனால், கால்நடை விவசாயம் ஓரளவு கைக்கொடுத்து வருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்கள் உட்பட உலகமே ஜெர்சி என்ற கலப்பின பசுவின் சத்து இல்லாத பாலுக்கு மாறிவிட்ட நிலையில், மிகவும் சுவைமிக்க ஊட்டச்சத்துடைய பால் தமிழகத்தில் தான் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்திலும் நாட்டுமாடுகளை அழிக்கவும் கலப்பின ஜெர்சி பசுக்களை இறக்குமதி செய்திடவும் பல்வேறு சதிவேலைகள் அரங்கேறி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடிநாதமாக இருந்ததே நாட்டு மாடுகளை காப்போம் என்பது தான். சர்வதேச முதலாளிகள் பீட்டா என்ற NGO மூலம் தமிழக நாட்டுமாடுகளை அழிக்க திட்டம் தீட்டியது. ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிபெற்றாலும், நாட்டு மாடுகளை நம்மிடம் இருந்து அந்நியப்படுத்தி ஜெர்சி பாலை தமிழர்களிடம் பழக்கப்படுத்தி, சில ஆண்டுகள் கழித்து நாம் அருந்து நாட்டு மாட்டு பாலை ஆர்கானிக் என்ற பெயரில் நம்மிடமே அதிக விலைக்கு விற்கும் சதித்திட்டத்துக்கு முன்னேற்பாடாக இது இருக்கலாம்.

இதை தான் பல ஆண்டுகளாக சர்வதேச உணவு நிறுவனங்கள், டூத்பேஸ்ட் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதற்காக அவர்கள் முதலில் கையில் எடுப்பது போலி ஆய்வுகளை தான். இதன் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி அதன் விற்பனையை சரிவடைய செய்வார்கள். வேறு வழியின்றி விவசாயிகளும் அதிக லாபம் தரும் ஜெர்சி மாடுகளை வளர்ப்பார்கள். நாடு மாடுகள் பெருமுதலாளிகளிடம் சென்றுவிடும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பரவிய ப்ளாஸ்டிக் அரிசி, ப்ளாஸ்டிக் முட்டை வதந்திகள் இதற்கு ஒரு முன்னுதாரணம். பல ஆண்டுகளுக்கு முன்னர் நம்மிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்ட வேர்கடலை இன்று வெளிநாட்டு விலை உயர்ந்த சாக்லெட்டுகளின் விற்பனை குறியாக (USP) ஆக உள்ளது.

சில மாதங்கள் முன்பாக அமெரிக்கா சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அமெரிக்காவில் உள்ளதை போல் கலப்பின ஜெர்சி பசுக்களை இறக்குமதி செய்து பால் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகள் பெரும் லாபல் அடைவார்கள் என்று கூறினார். ஆனால், அன்றைய பரபரப்பில் எந்த அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் அதை பெரிதுபடுத்தியதாக தெரியவில்லை. ஆனால், தற்போது அதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டனவா என்ற அச்சம் இந்த ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை மக்களின் உயிர் சம்பந்தப்பட்டது என்பதால், அதன் உண்மைத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. அதே வேளையில் மேற்கூறியது போல், பொய்யான ஆய்வுகள் மூலமே கார்ப்பரேட்டுகள் பல நாடுகளில் மக்களிடம் அச்சத்தை பரப்பி தங்கள் வியாபாரத்தின் கிளைகளை பரப்புகிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

BackgroundhiddenTamilnadu

இப்ராஹிம் எனக்கூறி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த லிங்கராஜ் என்பவர் கைது

நேற்றைய தினம் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட ஒருவர் இப்ராஹிம் என தன்னை அறிமுகம் செய்துள்ளார். மேலும், ஈரோடு ரயில் நிலையத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தெரிவித்து இணைப்பினை துண்டித்தார். இதனால், ஈரோடு ரயில் நிலையத்துக்கு மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவியுடன் விரைந்த போலீசார் ரயில்களிலும், பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தினர்.

சில மணிநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பொண்ட எண்ணின் முகவரியை போலீஸ் தேடியது. அதில், அந்த எண் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் பெயரில் இருந்துள்ளது. இதனை அடுத்து அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியபோது, தனது உறவினரான லிங்கராஜ் என்பவர் கடந்த வாரம் தன் முகவரி ஆவணத்தை வைத்து ஜியோ சிம்கார்டு வாங்கியதாக கூறினார். இதனை அடுத்து லிங்கராஜை போலீஸ் கைது செய்தது.

நியூசு விமர்சனம்:

கையில் இஸ்மாயில் என பச்சைக்குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக்கொன்ற இந்துத்துவ பயங்கரவாதி கோட்சேவின் பழைய தந்திரத்தை இன்று ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கும்பல் கைவிட்டதாக தெரியவில்லை. திரைப்படங்களில், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பொதுமக்கள் மனதில் அதை கட்டமைத்து வருகின்றனர். அந்த வகையில் இதுபோன்ற வேலைகளையும் இந்துத்துவாவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்த செய்தியை ப்ரேக்கிங் செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் யாவும், அதுபோலி, அதனை இப்ராஹிம் எனக்கூறி லிங்கராஜ் என்பவரை விடுத்துள்ளார் என காவல்துறை வெளியிட்ட அறிவிப்பை செய்தியாக்கவில்லை. இதன் மர்மம் அவர்களுக்கே வெளிச்சம்…

BackgroundEconomyIndia

அடிமேல் அடிவாங்கும் ஐடி… ஊசலாடும் பல லட்சம் இந்தியர்களின் வேலை

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகள், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான போக்கை கையாளுவது, ஊழலில் ஈடுபட்டு வங்கிக்கடன்களை வழங்கிவிட்டு வங்கிகளை திவாலாக்கும் நிலைக்கு தள்ளியது போன்ற காரணங்களால் இந்திய பொருளாதாரம் சின்னாபின்னமாகி உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்ததுடன், லட்சக்கணக்கானோர் வேலையும் பறிபோனது. பலருக்கு வேலை நேரம் குறைக்கப்பட்டது வார பணி நாட்கள் ஊதியத்துடன் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அடிவாங்க தொடங்கி இருக்கிறது மற்றொரு முக்கிய துறையான மென்பொருள் துறை. அந்த வகையில் இந்திய நிறுவனமான காக்னிசண்ட் 2020 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 7,000 பேரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் சென்னையில் எத்தனை பேரை நீக்கம் செய்ய உள்ளனர் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், குறிப்பாக அதிகம் ஊதியம் பெரும் மூத்த பணியாளர்களையே காக்னிசண்ட் குறிவைத்துள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு பிராஜெக்டுகள் குறைந்ததால், அனைத்து துறைகளிலும் பணியாளர் குறைப்பு மட்டுமே நடந்துவருகிறது. எந்த நிறுவனமும் புதிய பணியாளர்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கவில்லை. இந்த சூழலில் பணிநீக்கம் செய்யப்படும் காக்னிசண்ட் நிறுவன ஊழியர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை கிடைப்பதும் கேள்விக்குறியே.

இதே போல் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஐ.டி. நிறுவனங்கள் , பொருளாதார வீழ்ச்சியால் புதிய ப்ராஜக்டுகள் இன்றி தவிப்பதால் பல லட்சம் ஐ.டி. ஊழியர்களின் வேலை ஊசலாடி வருகிறது. ஐ.டி. ஊழியர்களை நம்பியே பல உணவகங்கள், தங்கும் விடுதிகள், கால் டாக்சிகள், வாடகை வீடுகள், ஆட்டோக்கள், சாலையோர கடைகள் இயங்குகின்றன. இந்த ஐ.டி. தொழில் முடங்கினால் அவர்களை சார்ந்துள்ள இந்த பெரும்பாலானோரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

இதுகுறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டியை காண்போம்.

1 2 3 14
Page 1 of 14