Politics

hiddenIndiaPolitics

நிறைவேறியது குடியுரிமை திருத்தச்சட்டம் – ஆதரித்த, எதிர்த்த கட்சிகள் எவை?

இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள், வட கிழக்கு மாநிலத்தவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கி எதிரானது பல தரப்பினராலும் சாடப்பட்டு வரும், திங்கள்கிழமை மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை தவிர்த்து மற்ற மத அகதிகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.க்களும், எதிர்த்து 105 பேரும் வாக்களித்துள்ளனர்.

ஆதரித்த கட்சிகள்: பாரதிய ஜனதா, தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கின் பிஜூ ஜனதா தளம்ம் பஞ்சாபை சேர்ந்த பாஜக கூட்டணி கட்சியான சிரோமனி அகாலி தளம், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்.

எதிர்த்த கட்சிகள்: காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், முஸ்லீம் லீக், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஆம் ஆத்மி.

இதில் மற்றுமொரு இந்துத்துவ கட்சியான சிவசேனை மசோதா மீதான வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. மக்களவையில் தங்கள் கட்சி மசோதாவுக்கு ஆதரவளித்தபோதிலும் தாங்கள் அளித்த திருத்தங்களை ஏற்க மறுத்ததால் புறக்கணிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

fact checkIndiaPoliticsTamilnadu

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு வாக்களிக்காமல் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததா?

குடியுரிமை திருத்த மசோதா திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், எப்படி 80 வாக்குகள் மட்டுமே எதிராகப் பதிவாயின, யார் ஓட்டுப் போடவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒரு கட்டத்தில், தி.மு.க. இந்த மசோதாவை எதிர்த்தாலும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்துவிட்டது என மூத்த பத்திரிகையாளர்களே எழுத ஆரம்பித்தார்கள். இத்தனைக்கும் முந்தைய நாள் இரவு, தொலைக்காட்சியில் நேரலையாக நடந்த நிகழ்வில், என்ன நடந்தது என்பதில் இவ்வளவு குழப்பம். மக்களவை உறுப்பினர்களிடம் கேட்டால், “ஏன் தி.மு.க.தான் எதிர்த்து வாக்களித்ததே” என்கிறார்கள். இதுகுறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களித்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் ஆதாரம் இல்லை. எந்தப் பத்திரிகையிலும் எந்தக் கட்சியெல்லாம் எதிர்த்து வாக்களித்தார்கள், எந்தக் கட்சியெல்லாம் ஆதரித்து வாக்களித்தார்கள் என்ற விவரங்கள் இல்லை.

இதையெல்லாம்விட உச்ச கட்டக் குழப்பம், முரசொலியில் வந்த செய்தி. “குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறைபாடுடையது! மக்களவையில் டி.ஆர். பாலு பேச்சு! தி.மு.க. வெளிநடப்பு!” என்றது அந்தச் செய்தி.

ஆகவே, தி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததற்கு முரசொலியே ஆதாரமாக இருந்தது. ஆனால், எதிர்த்து வாக்களித்ததற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இது தவிர, தாங்கள் வெளிநடப்புச் செய்வதாக டி.ஆர். பாலு பேசிய உரையும் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

உண்மையில் என்ன நடந்தது?

வாக்களிப்பில் தி.மு.க. எம்.பிக்கள் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், மக்களவையில் உள்ள எலெக்ட்ரானிக் வாக்களிக்கும் ஸ்விட்சுகளில் ஏகப்பட்ட பிரச்சனை. பலரது வாக்குகள் பதிவாகவேயில்லை என்கிறார்கள் எம்பிக்கள். இந்த 311-80 என்பது பதிவான வாக்குகளில் ஆதரவு – எதிர்ப்பு விகிதம்தான். உண்மையிலேயே எவ்வளவு ஆதரவு, எவ்வளவு பேர் எதிர்ப்பு என்பது யாருக்கும் தெரியாது.

இந்தக் குழப்பத்திற்குப் பிறகு, வாக்குகள் பதிவாகாதவர்களுக்கு தனியாக வாக்குச் சீட்டுகள் கொடுத்து வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்னும் யாருக்கும் தெரியாது. லோக்சபா நடவடிக்கைகளுக்கென ஒரு இணையதளம் இருக்கிறது. அதில் மக்களவையின் ஒவ்வொரு மணி நேரமும் யார் என்ன செய்தார்கள் என தகவல்கள் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட டிசம்பர் 9ஆம் தேதியன்று, மக்களவை இணையதளத்தில் இரவு 10-11வரை என்ன நடைபெற்றது என்ற தகவல்கள் இருக்கின்றன.

11-12 மணியளவில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்த 11 -12 மணியளவில்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தகவல் லோக் சபா இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டால், எந்தக் கட்சி யாருக்கு வாக்களித்தது என்பதில் தெளிவு வரும்.

முரசொலி ஏன் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக செய்தி வெளியிட்டது?

அதாவது காலையில் குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அறிமுக நிலையிலேயே அந்த மசோதாவை தி.மு.க. எதிர்த்தது. அந்தத் தருணத்தில்தான், அதனை எதிர்த்துப் பேசிவிட்டு டி.ஆர். பாலு வெளிநடப்புச் செய்தார்.

இந்தச் செய்திதான் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக முரசொலியில் வெளியானது. தினத்தந்தி செய்தியிலும் தலைப்பில் தி.மு.க. வெளிநடப்பு என்று இருந்தாலும், செய்திக் கட்டுரையின் உள்ளே, தி.மு.க. அறிமுக நிலையில் வெளிநடப்புச் செய்ததாகவும் பிறகு திரும்பி வந்ததாகவும் இருந்தது.

எல்லோர் கண் முன்பும் நடந்த ஒரு நிகழ்வு செய்தியாகப் பதிவாவதில் இவ்வளவு குழப்பம்!

-முரளிதரன் காசி விஸ்வநாதன்

BackgroundPoliticsTamilnadu

உள்ளாட்சித் தேர்தல் நெருங்குதுல… இந்த வருசமும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபா இருக்கு

பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகையாக ₹1,000 வழங்குவற்கு, ₹2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பாக தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, இரண்டு அடி கரும்பு மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான முந்திரி பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியது.

இந்த ஆண்டும் பரிசு தொகை வழங்க 2363 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறும் ரேசன் அட்டைகளாக ஆன்லைன் மூலம் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதற்காகவும் கூடுதலாக 100 கோடிரூயாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நியூசு விமர்சனம்:

தமிழக அரசால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் மக்களவை தேர்தலில் ஓட்டுப்போடும் மக்களுக்கு பணம் கொடுப்பதற்காக தான் என விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை கவர்வதற்காக இந்த ஆண்டும் ₹1,000 நிதியுதவி வழங்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக அரசின் கடன் பன்மடங்கு அதிகரித்துள்ளதுடன், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, வைப்பு நிதி வழங்கக்கூட பணம் இல்லை என அரசு கைவிரிக்கும் நிலையில், இந்த ₹2,363 கோடி செலவு தேவைதானா என்ற கேள்வி எழாமல் இல்லை.

EconomyhiddenPoliticsTamilnadu

மருத்துவம், இறுதிச் சடங்குக்காக ரூ.46,000 சேமித்த பாட்டிகள் – செல்லாமல் ஆக்கிய மோடி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள பொம்மலூரை சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் (75), தங்கம்மாள் (72). இவர்களில் ரங்கம்மாளுக்கு 7 பிள்ளைகளும் தங்கம்மாளுக்கு 6 பிள்ளைகளும் உள்ளனர். அனைவரும் பணிநிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கம்மாள் ஆஸ்துமா பாதிப்பால் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது பிள்ளைகளிடம், தனது மருத்துவத்துக்காகவும், இறுதிச் சடங்கிற்காகவும் ரூ.24,000 சேமித்து வைத்துள்ளதாக சொல்லி அது உள்ள இடத்தையும் கூறினார். அதை தேடி எடுத்த தங்கமாளின் பிள்ளைகளுக்கு அதிர்ச்சி. ஆம், அவர் சேமித்த பணம் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் செல்லாமல் ஆக்கினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கம்மாள் தனது, சகோதரி ரங்கம்மாளும் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.22,000 சேமித்துள்ளதாக கூறினார். இதனை கேள்விப்பட்ட ரங்கம்மாள் பணம் செல்லாமல் ஆக்கப்பட்ட செய்தியே தனக்கு தெரியாது எனக்கூறி, கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு சேமித்த பணம் இப்படி ஒன்னுக்கும் உதவாக வெற்று தாளாகி விட்டதே எனக்கதறினார்.

பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பால் நாடின் பொருளாதாரம் ஒரு அடி கூட முன்னேறவில்லை. அதே நேரம் நாட்டின் பொருளாதாரம் அகல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுபோல் ஏழைகளின் சேமிப்புகளும் வீணாக்கப்பட்டு வருகிறது.

PoliticsTamilnadu

மீண்டும் சர்ச்சையில் ராஜேந்திர பாலாஜி… துட்டு இல்லாட்டி சீட்டு இல்லையாம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மல்லியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசினார்.

அப்போது அவர் “அ.தி.மு.க வில் வயதானவர்களுக்கு சீட்டு கிடையாது. பிரிந்து போனவர்கள் தற்போது அதிமுக இணைந்துள்ளார்கள். அண்ணன் தம்பிகளுக்கிடையே சண்டை நடந்துள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சியான அதிமுகவில் சண்டை இருக்கத்தான் செய்யும். அதிமுக மட்டுமே ஆள வேண்டும். வசதி வாய்ப்பு இல்லாமல் வயதானவர்களுக்கு சீட் கொடுக்க முடியாது. இது கம்யூட்டர் காலம் அதனால் இளைஞர்களை தேர்வு செய்து சீட்டு கொடுங்கள்.

திமுக அழிந்து வருகிறது. அதில் உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்க ஆள் இல்லை. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் சங்கை பிடித்தோம், தப்பி தவறி 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஜெயித்து விட்டார்கள். சங்கை இறுக்கி பிடித்தால் சோலி முடிஞ்சிருக்கும் என விமர்சனர். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தற்போது அதிமுக பக்கம் உள்ளனர். திமுக தப்பு செய்ய ஆட்சிக்கு வரும் அதிமுக நல்லது செய்ய ஆட்சிக்கு வரும்.” என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

hiddenPoliticsTamilnadu

ஆந்திராவில் 98 ரூபாய்க்கு ஜோராக விற்பனையாகும் தமிழக அரசின் இலவச பொங்கல் சேலை

தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், பொங்கல் பண்டிகைக்கு ஏழை மக்களும் புத்தாடை அணிய வேண்டும் என்ற நோக்கத்திலும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு 1983-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த வேட்டி சேலை ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர், கோவை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 2.50 கோடி வேட்டி, சேலைகள் உற்பத்தியாகின்றன. இதன் காரணமாக மூலம், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேரடியாக, மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி ரேஷன் கடைகளில் விரைவில் வேஷ்டி சேலைகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், அதற்காக தயாரிக்கப்பட்டு உள்ள சேலைகள் ஆந்திர மாநிலன் திருப்பதியில் உள்ள சி.எம்.ஆர். என்ற கடையில் தமிழக அரசின் சீலுடன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகைப்படங்களுடன் தகவல் வெளியாகி இருக்கிறது. 2019 என்று அச்சிடப்பட்டுள்ள அந்த சேலை ஒன்று ரூ.196 என்று குறிப்பிடப்பட்டு 50% டிஸ்க்ண்ட் அறிவிக்கப்பட்டு 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மக்களுக்கு விநியோகம் செய்த பின்னர், அதை பயன்படுத்தாதவர்களிடம் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி வெளிமாநிலங்களில் விற்பது வழக்கம். அரசு வழங்கிய இலவச பொருட்களை விற்பனை செய்வதே குற்றம் என அரசு அறிவித்து அதற்கு தடை விதித்துள்ளபோது, மக்களிடம் விநியோகிப்பதற்கு முன்பாகவே இந்த இலவச பொங்கல் சேலைகள் ஆந்திராவில் விற்பனை செய்யப்படுவது எப்படி என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளது. இது கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அல்லது ஆளுங்கட்சியினரின் துணையுடன் தான் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது.

பண்டிகைக்கு ஒரு சேலைகூட வாங்க முடியாத ஏழை மக்கள், அரசின் பொங்கல் சேலையை ஆசையுடன் வாங்கிக்கட்டுவதை கிராமங்களில் பார்க்க முடியும். அப்படிப்பட்டவர்களுடைய உடமைகளையும் திருடும் வகையில் கள்ளச்சந்தைக்கு கடத்துவது மிகவும் கொடுமையானது. இதுபோல் கள்ளச்சந்தைக்கு இலவச சேலை கடத்தப்படுவதால் ரேஷன் கடைகளில் முதலில் வருபவர்களுக்கு மட்டும் சேலை கிடைக்கும் நிலை உண்டாகும். இதுகுறித்து அரசு விரைந்து விசாரணை நடத்தி ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.

PoliticsTamilnadu

ரஜினி இமயமலை ஓடி விடுகிறார்… கமல் நாடோடியாக திரிகிறார் – அமைச்சர் சாடல்

ஈரோடு மாவட்டம் பவானியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு முழுமையாக செய்து கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வெற்றிடம் இல்லை எனக்கூறிய அமைச்சர், ரஜினி இமயமலை ஓடி விடுவதாகவும், கமல்ஹாசன் நாடோடியாகத் திரிந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஆட்சியை விட வேறு யாரும் இதுவரையிலும் சிறந்த ஆட்சி கொடுக்கவில்லை என புகழ்ந்த அமைச்சர், இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட அவர்கள் இருவரும் எந்த ஒரு பதவிக்கும் வர முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர், படம் வெளியாகும்போது நாட்டு மக்களுக்களிடம் வந்து அள்ளி தருகிறேன் என்று கூறும் நடிகர்கள், நாட்டு மக்களின் பலகோடி பணத்தை அள்ளிச் சென்று விடுவார்கள் என்றார்.

உயர் மின் கோபுரம் விவசாய நிலங்களில் அமைப்பதிற்கு எதிராக வருகின்ற 18ம் தேதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட போவதை பற்றிய கேள்விக்கு பதிலளித்த கருப்பணன், உயர் மின் கோபுரம், எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் யாரும் போராடவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் தான் போராடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

BackgroundPoliticssocietyTamilnadu

சாக்கடை அள்ள கூட மெசின் இல்லாமல் சாகும் உயிர்கள்… EXPRESS AVENUEவில் அம்பலமான நாட்டின் இழிநிலை!

நாகரீக வளர்ச்சியிலும் கழிவுநீர்த்தொட்டி காவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ கீழ்தளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்காக ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அருண்குமார் ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் என்ற நான்கு நபர்களை அழைத்துக்கொண்டு சென்று உள்ளார்.

இதில் ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவருடைய அண்ணன் அருண்குமார், ரஞ்சித் குமாரை காப்பாற்றுவதற்கு கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார்.

மயக்கம் அடைந்தவரை சாதூர்யமாக தேடி மேலே தூக்கி விட்ட அருண்குமார், விஷவாயுவின் கோரத்தால் கழிவுநீர் தொட்டியிலேயே உயிரிழந்தார்.

பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருண்குமாரின் உடலை பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்டு வழக்கம்போல உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்பு பணிகளை செய்ய அனுமதியளித்த வணிக வளாகம், மனித கழிவை அகற்றும் மனிதர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தியிருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.

துப்புரவு பணிகளின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என அரசும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற சில வணிக வளாகங்கள் இதில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது….

நஷ்ட ஈடின் மூலம் குறைந்தபட்சம் அருண்குமாரின் குடும்பத்திற்காவது எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற வணிக வளாகங்கள் பதில் கொடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆய்வுப்படி சென்னையில் மட்டும் கழிவுநீர்த்தொட்டியில் 144 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக பேனர் பலி, ஆழ்துளை பலிகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கூட கழிவுநீர்த்தொட்டியின் கணக்கற்ற பலிகளுக்கு மேற்கொள்ளப்படவில்லை என்பதே பெரும் வேதனை.

இது அரசு இயந்திரம் எதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது?

EducationPoliticsTamilnadu

சென்னை IIT மாணவி பாத்திமா மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை ஐ.ஐ.டி மாணவி
விடுதியில் தற்கொலை
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்விநிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் தனது துறைத்தலைவர் சுதர்சன் பத்மநாபன் அவர்களின் மனரீதியான கடும் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து இந்த மாணவி மதரீதியான பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டதால்தான் தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துள்ளது நெஞ்சை உலுக்குகிறது.

சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அப்புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மறுத்து கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், புகார் கொடுத்த பெற்றோரிடம் காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

மாணவி தற்கொலை குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், பெற்றோரை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான செயலாகும். காவல்துறையினரின் இந்த அராஜகப்போக்கினை வன்மையாக கண்டிப்பதுடன், அவர்கள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பாகுபாடு காட்டப்படுவது தொடர்ந்து நீடித்து வருவதாகவே தெரிகிறது. இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தகைய மோசமான பாகுபாடான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐந்துபேர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர். இது குறித்து சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் இதுவரை எந்தவிதமான முறையான விசாரணையோ, நடவடிக்கையோ மேற்கொள்ளாதது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக காவல்துறை இதுகுறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் இத்தகைய சம்பவங்கள் இனிமேல் இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் தொடராத வண்ணம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

– கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

PoliticsTamilnadu

மாவட்டங்களை பிரிச்சு மேயும் தமிழக அரசு… இனி 32 இல்ல… 37!

தமிழகத்தில் 3 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக மேலும் 2 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் நெல்லை 2 மாவட்டமாக பிரிக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து மாவட்டங்களை தாலுக்கா வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், 3 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக மாவட்டங்களின் பட்டியல்:

1.சென்னை
2.காஞ்சிபுரம்
3.திருவள்ளூர்
4.திருவண்ணாமலை
5.வேலூர்
6.விழுப்புரம்
7.கடலூர்
8.அரியலூர்
9.பெரம்பலூர்
10.திருச்சி
11.புதுக்கோட்டை
12.தஞ்சாவூர்
13.நாகப்பட்டினம்
14.திருவாரூர்
15.சேலம்
16.தருமபுரி
17.கிருஷ்ணகிரி
18.நாமக்கல்
19.கரூர்
20.ஈரோடு
21.திருப்பூர்
22.கோயம்புத்தூர்
23.நீலகிரி
24.திண்டுக்கல்
25.மதுரை
26.ராமநாதபுரம்
27.தேனி
28.சிவகங்கை
29.விருதுநகர்
30.திருநெல்வேலி
31.தூத்துக்குடி
32.கன்னியாகுமரி
33.கள்ளக்குறிச்சி
34.தென்காசி
35.செங்கல்பட்டு
36.திருப்பத்தூர்
37.ராணிப்பேட்டை

தமிழக அரசு நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின உரையில் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

புதிய மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள வருவாய் கோட்டங்கள் மற்றும் தாலுக்காக்கள் விபரம்

கள்ளக்குறிச்சி:

விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களாகவும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன்மலை (புதியது) என மொத்தம் 6 தாலுகாக்கள் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ளது.

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி பிரிவுக்கு பின் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணைநல்லூர்(புதியது), திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுக்காக்களும் உள்ளது.

தென்காசி:

நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி புதிய மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டங்களாகவும், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் உட்பட 8 தாலுக்காக்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ளது.

திருநெல்வேலி:

தென்காசி பிரிவுக்கு பின்திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, திசையன்விளை ஆகிய 8 தாலுக்காக்களும் உள்ளது.

செங்கல்பட்டு:

காஞ்சிபுரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களும், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர்(புதியது), மதுராந்தகம், செய்யூர், திருக்கழுகுன்றம், திருப்போரூர் ஆகிய 8 தாலுக்காக்கள் இடம்பெற்றுள்ளன.

காஞ்சிபுரம்:

செங்கல்பட்டு பிரிவுக்கு பின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டங்களும், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர்(புதியது) ஆகிய 6 தாலுக்காக்கள் இடம்பெற்றுள்ளன.

திருப்பத்தூர்:

வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் புதிய மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி(புதியது) ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும், திருப்பதூர், வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி, ஆம்பூர் ஆகிய 4 தாலுக்காக்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை:

வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம்(புதியது) வருவாய் கோட்டங்களும், வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய 4 தாலுக்காக்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

வேலூர்:

திருப்பத்தூர், ராணிப்பேட்டை பிரிவுக்கு பின் வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம் (புதியது) ஆகிய வருவாய் கோட்டங்களும், வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் கே.வி. குப்பம் (புதியது) என மொத்தம் 6 தாலுக்காக்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

1 2 3 29
Page 1 of 29