Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் பாஜகவை அனுசரிக்கும் கட்சிக்கு தான் ஆட்சி – வி.பி.துரைசாமி

பா.ஜ.க. துணை தலைவர் வி.பி.துரைசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவில் இருந்து வந்தாலும் நான் நானாகவே இருக்கின்றேன். நான் பாஜகவிற்கு வந்ததால் எவ்வித எதிர்ப்பும் இல்லை, வரவேற்பு அதிகமாகவே உள்ளது. திமுகவில் இருந்து பாஜகவில் சேர அதிகமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே தேர்தல் என்ற தேர்வை சந்தித்து இரண்டாவது முறை பிரதமராக மோடி பொறுப்பேற்று உள்ளார். மத்திய அரசின் ஆட்சி சாதனைகளை மக்கள் ஏற்று கொண்டதால் தான் இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்ததால் மோடி அவர்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்றுள்ளார்.

நடிகர் சூர்யாவின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நீட் தேர்வை ஸ்டாலின் அவர்களால் 10 மாதங்கள் ஆனால் கூட நிறுத்த முடியாது. தகுதியான மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.

மும்மொழி கொள்கை நாட்டிற்கு தேவை. புதிய தேசிய கல்வி கொள்கையில் இந்தியை மட்டும் தான் படிக்க வேண்டும் என மத்திய அரசு கூறவில்லை. ஒரு மொழியை கூடுதலாக கற்று கொள்ள வேண்டும். தாய் மொழி கல்வியை 5 ஆம் வகுப்பு வரை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்.

அரசியல் வாதிகள் நீட் தேர்வு குறித்து தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். கொரொனா காலக்கட்டத்தால் ஜி.எஸ்.டி வரியின் மீதான திரும்ப அளிக்கும் தொகை இப்போது மாநிலங்களுக்கு வழங்குவதில் மத்திய அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

45 ஆண்டு காலம் நான் தேசிய கட்சியில் இல்லாமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகளோடு ஒன்று இணைந்து மக்கள் செயல்பட வேண்டும். ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு பேசிக்கொள்ளலாம்.

நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும். மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் முறைகேடுகள் நடந்தால் மாநில அரசுகள் திருத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வரும் கட்சி. பா.ஜ.க.வை அனுசரித்து கொண்டு போகும் கட்சி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடி மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

ஆயுஸ்மான் பாரத் அனைவரும் சேர்ந்து கொள்ள வேண்டும். நாட்டின் எல்லை பகுதிகளில் இந்திய அரசின் ராணுவம் பலமாக உள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகளை விரைவில் இந்தியா மீட்கும்.” என்றார்.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: