Newsu Tamil
சினிமா மக்கள்

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதா கோங்ரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில்,

“கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா. என்னங்கடா நாடு, அட சாதிய தூக்கி மூடு”

என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

பாடல் வீடியோ:

சாதிவெறியை எதிர்த்து ஏகாதசி எழுதியுள்ள வழுவான வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாதி வெறி, ஆதிக்கம் போன்றவற்றை எதிர்த்து இப்பாடல் பேசுவதாக பலரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில், இந்த பாடலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழ்நாட்டில் இதுபோன்ற பாடல் பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி தருமபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

உண்மையாக இந்த பாடல் என்பது சாதி வெறிக்கு எதிராகவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதை சகித்துக் கொள்ள முடியாதவர் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்துள்ளனர்.