Newsu Tamil
Headlines உலக செய்திகள்

முதுகில் குத்திய பஹ்ரைன்.? பலி கொடுக்கப்படும் ஃபலஸ்தீன்.!

இஸ்ரேலுடனான உறவை மேம்படுத்தும் மும்முரமான போட்டியில் தற்போது மத்திய கிழக்கு அரபுநாடுகள் ஈடுபட்டுள்ளன. ஜோர்டான், எகிப்து, அமீரகத்தைத் தொடர்ந்து சமீபத்தில் பெஹ்ரைனும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

இதனை அமீரகம் உட்பட சில அரபு நாடுகள் வரவேற்றுள்ள நிலையில், ஃபலஸ்தீனின் பி எல் ஓ, துருக்கி மற்றும் ஈரான் முதலான நாடுகள் பெஹ்ரைனின் இம்முடிவு ஃபலஸ்தீனின் முதுகில் குத்தும் துரோகச் செயல் எனக் கண்டித்துள்ளன.

அரபு நாடுகளின் பெரிய அண்ணன் சவூதி தனக்கு இதில் எந்தத் தொடர்புமே இல்லை என்பது போல் மவுனம் காக்கிறது. ஆனால், இஸ்ரேலுக்கு நெருக்கமாக இந்த அரபு நாடுகள் செல்வதன் பின்னணியில் இருப்பதே சவூதிதான் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னர், இஸ்ரேலுக்கும் அமீரகத்துக்குமிடையிலான ஒப்பந்தம் ஏற்பட்டதும் அமீரகத்துக்கும் துபைக்குமிடையிலான விமானப் போக்குவரத்துக்குத் தம் வான்வழியைத் திறந்து கொடுப்பதாக சவூதி அறிவித்தது. கூடிய விரைவிலேயே இஸ்ரேலுடனான நேரடி ஒப்பந்தத்தைச் சவூதி அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கெல்லாம் பின்னணி என்ன?

பெஹ்ரைனுடனான ஒப்பந்தத்துக்குப் பின்னர் இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சர் கூறிய கருத்தில் இதற்கான பதிலுண்டு. இந்த ஒப்பந்தம் மூலம் மத்தியக் கிழக்கு நாடுகளின் பொருளாதார, பாதுகாப்பு மேம்படும் என்பதே அக்கருத்து. தம் பொது எதிரியை எதிர்கொள்வதற்கு இக்கூட்டு நலம் பயக்கும் எனவும் கூறியுள்ளது. அப்பொது எதிரி, ஈரான்! அதற்காக, ஃபலஸ்தீனைப் பலி கொடுக்க அரபுநாடுகள் முடிவு செய்துவிட்டன என்பதே சமீபத்திய அரசியல் நகர்வுகள் கூறும் செய்தி.

  • 1967 போருக்குப் பின்னர் இஸ்ரேல், ஃபலஸ்தீன் என்ற இரட்டை நாடு விசயத்தை ஃபலஸ்தீன் விவகாரத்தில் தீர்வாக முன் வைப்பது ஓஸ்லோ ஒப்பந்தம்.
  • இஸ்ரேல் என்ற நாட்டையே அங்கீகரிக்க முடியாது என்பது ஹமாஸின் நிலைப்பாடு
  • ஃபலஸ்தீன் என்றொரு நாடே இருக்கக்கூடாது என்பது இஸ்ரேலின் அணுகுமுறை

மத்தியக் கிழக்கு தீர்வு என்ற பெயரில் தற்போது ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுப்பது முழுக்க, இஸ்ரேலின் திட்டத்துக்குச் சாதகமானவையே. காஸாவையும் மேற்கு கரையையும் முழுமையாக ஆக்ரமித்துள்ள இஸ்ரேல் அதனை விட்டு வெளியேறி, சுதந்திர ஃபலஸ்தீன் அமைய வழிவிட்டால் மட்டும்தான் இப்பிரச்சனை ஓயும். ஒஸ்லோ ஒப்பந்தமும் அதனைத்தான் முன்மொழிகிறது. ஆனால், ஃபலஸ்தீனுக்குச் சொந்தமான ஜெரூசலேமை மேற்கு, கிழக்கு எனப் பிரித்து கிழக்கை ஏற்கெனவே கையப்படுத்தியிருந்த இஸ்ரேல், சமீபத்தில் அமெரிக்கா தன்னுடைய இஸ்ரேலுக்கான தூதரகத்தை மேற்கு ஜெரூசலேமுக்கு மாற்றியதோடு முழு ஜெரூசலத்தையும் கிட்டத்தட்ட கையகப்படுத்தி விட்டது.

இதனைத் தட்டிக் கேட்கவோ, எதிர்க்கவோ துப்பில்லாத அரபு நாடுகள் தங்களின் சொந்த நலனுக்காக, ஈரான் எனும் பூச்சாண்டியைக் காட்டி கிட்டத்தட்ட முழுமையாக இஸ்ரேலுக்குச் சரணாகதியாகி விட்டன. ஃபலஸ்தீன் விவகாரத்தில் நியாயமானதொரு தீர்வுக்கு இஸ்ரேலை வரவைக்கும் நிபந்தனையையாவது கூட்டணி ஒப்பந்தத்தில் கொண்டு வரலாம். அதுகூட செய்யத் தயாரில்லாமல், ஈரானின் பெயரால் கிட்டத்தட்ட ஃபலஸ்தீனை முழுமையாக தாரை வார்க்க அரபு நாடுகள் தயாராகிவிட்டன.

யெமனில் ஹூதிகளின் ஆதிக்கம், லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதிக்கம், பெஹ்ரைனில் ஷியாக்களின் ஆதிக்கம், சிரியாவில் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதிக்கம், ஹிஸ்புல்லாஹ்வுடன் ஹமாஸ் தொடர்பு, ஹமாஸுடன் இஹ்வானுல் முஸ்லிமீன் தொடர்பு… இவையே அமெரிக்காவின் கண்ணசைவுக்கு ஏற்ப இஸ்ரேலின் பின்னால் வாலாட்டிச் செல்ல அரபு நாடுகளை ஊக்குவிக்கும் காரணிகள்.

2011 அரபு வசந்தப் புரட்சிக்குப் பின்னர், மற்றொரு புரட்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரபு அரசப் பரம்பரையினர் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர். அவர்களின் அந்தப் பயத்தையே இஸ்ரேலும் அமெரிக்காவும் முதலீடாக கொண்டு, ஈரானை முன் நிறுத்தி தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அரபு நாடுகளைச் செயல்பட வைக்கின்றன.

ஜோர்டான் அரசர், பெஹ்ரைன் அரசர், சவூதி அரசர்… ஜனநாயகத்தை உலகெங்கும் மொத்தவிலைக்கு விற்பனை செய்து நடக்கும் அமெரிக்கா, மேற்கண்ட மன்னர் பரம்பரையினரை மத்தியக் கிழக்கில் தூக்கி சுமந்துநடப்பதற்கான காரணமும் வேறல்ல.

இந்தப் புதிய அரசியல் நகர்வில் அரபு நாடுகளால் பலி கொடுக்கப்படுவது ஃபலஸ்தீனாக இருந்தாலும் யதார்த்தத்தில், முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் தான் பலி கொடுக்கப்படுகிறது என்பது நிச்சயம். ஜெரூசலத்துக்குச் சற்று மேலே இஸ்தான்புலில் அமைந்துள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஹாகியா சோபியாவை மீண்டும் பள்ளிவாசலாக துருக்கி மாற்றியிருக்கும் நிலையில், அரபு நாடுகளுக்கு உள்ளேயே அமைந்துள்ள பைத்துல் முகத்தஸை முஸ்லிம்கள் இழந்து கைகட்டி இருப்பர் என்பது ஒருபோதும் நடக்காத காரியம்.

பைத்துல் முகத்தஸை மையப்படுத்திய அரசியல் என்பது இன்று நேற்றைய அரசியல் அல்ல. அது, சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல். இக்காலக் கட்டத்தில் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் கைவிட்டுப் போனபோதெல்லாம் அய்யூபிகளும் உஸ்மானியாக்களும் உருவாகி அதனை மீட்டெடுத்துள்ளனர். அரபுகள் தம் வரலாறு மறந்து, தம் வாழ்வே முக்கியம் எனச் சென்றால்கூட வரலாறு அதே பாதையிலேயே பயணிக்கும்!