Newsu Tamil
அரசியல் அறிவியல் கல்வி சினிமா

நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு – நடவடிக்கை வேண்டாம் என கடிதம்

மத்திய பாஜக அரசின் நீட் தேர்வால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டையே உறைய வைத்தது. இந்த நிலையில், நீட் தேர்வை எதிர்த்து நடிகர் சூர்யா நேற்று விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அது அனைத்து தரப்பு மக்களால் பாராட்டப்பட்டது.

அதில் குறிப்பாக “கொரானாவால் உயிருக்கு பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.” என குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் சூர்யா இந்த கருத்தை தெரிவித்ததற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபர் எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றத்தை மிகக்கேவலமாக இழிவுபடுத்தி பேசியதற்கு பெரியளவில் நடவடிக்கை எதுவும் எடுக்காத நீதிமன்றம், நடிகர் சூர்யாவின் நாகரிகமான விமர்சனத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஓய்வுபெற்ற 6 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அதில் “நடிகர் சூர்யாவின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, ட்டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், நடிகர் சூர்யா அறிக்கை குறித்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் என்ற முறையில் கேட்டுக்கொண்டுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாக தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை.” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.