Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் தலையங்கம் பின்னணி

அன்று தாலிக்காக புதிய தலைமுறை மீது குண்டு வீசியவர்கள் இன்று நீட் தேர்வுக்காக…

கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்கு அவசியமா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தன்னை கொடுமைப்படுத்தும் கணவனிடம் இருந்து காப்பாற்ற முடியாத தாலியை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? என்று கேட்டு நிகழ்ச்சி பதிவின்போது தாலியை கழற்றி எறிந்தார். அது ப்ரமோ வில் வெளியானது.
இதை ஏற்றுக் கொள்ள முடியாத இந்துத்துவ மதவாத கும்பல் புதிய தலைமுறை அலுவலகத்திற்கு அச்சுறுத்தல் விட தொடங்கியது. இந்து பண்பாட்டிற்கு எதிரான வேலையை செய்கிறார்கள் என்று கூச்சல் போட்டு வெறுப்பை பரப்பி, நிகழ்ச்சியை நிறுத்த நிர்பந்தித்தது. அதோடு மட்டுமில்லாமல் அந்தப்பெண்ணை அடையாளங் கண்டு, அவர் வீடு வரை சென்று மிரட்டவும் செய்தது. இதன் தொடர்ச்சியாக அலுவலகத்திற்குள் 2 டிபன் பாக்ஸ் குண்டை வீசி சென்றது.

இப்படி இந்துமத பண்பாடான தாலியை காக்கிறோம் என வெடிகுண்டு வீசியவர்கள் தான் தற்போது புதுமணப் பெண்ணின் தாலி, மெட்டியை கழட்டி வைத்துவிட்டு நீட் தேர்வு எழுத சொல்கிறார்கள். தாலி குறித்தான விவாதம் ஒருபுறம் இருந்தாலும், இன்றளவும் அது உணர்வு மிகுந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒன்றை தேர்வுக்கு முன் கழற்றி வைத்து செல்ல செல்வது மன உளைச்சலையும், அழுத்தத்தையும் தான் மாணவிக்கு கொடுத்திருக்கும்.

மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்கள், அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். “தாலிக்கயிற்றை வைத்து மோசடி செய்ய முடியும் என்றால், பிராமணர்கள் அணியும் பூணூலில் மோசடி செய்ய முடியாதா? பூணூலை அவிழ்க்க சொல்லாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், வழக்கம் போலவே இந்துத்துவ வலதுசாரிகள் மாணவர்களின் மரணத்தை கொச்சைப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.