Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் கல்வி

நீட் தேர்வை எதிர்த்து நாளை நாடாளுமன்றம் முன் போராட்டம் அறிவிப்பு

டெல்லியில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தரப்பில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

“சுற்றுசூழல் வரைவு அறிக்கை 2020 , தேசிய கல்வி கொள்கை 2020 , நீட் தேர்வு உள்ளிட்டவை குறித்து மிக முக்கியமாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளோம்.

நேற்றைய தினம் தமிழகத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் எதிர்கால மாணவர்களின் நலனுக்காக தங்களின் உயிரை தியாகம் செய்து உள்ளார்கள்.

14ம் தேதி காலை கூட்டம் தொடங்கிய உடனே இது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று ஓம் பிர்லா அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக திமுக தரப்பில் குரல் எழுப்பப்படும் என்றார்.

சீனாவின் மிரட்டல் / ஆக்கிரமிப்பு தன்மையால் தமிழகத்திற்கும் பாதிப்பு உள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “சேது சமுத்திர திட்டம்” தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

சென்னை – சேலம் 8வழி சாலை திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

வேலை வாய்ப்பு திண்டாட்டம் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது, இதனை சரிசெய்ய சீரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

குடும்பத்திற்கு 5,000 ரூபாய் இழப்பீட்டு தொகை கொடுக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

கூட்டம் நடைபெறவுள்ள 18 நாட்களில் கூட்டத்தில் மொத்தமாக 24 விவகாரங்கள் குறித்து பேசவுள்ளோம், இதில் நீட் ரத்து உள்ளிட்ட மிக முக்கியமான 12 விவகாரங்கள் பற்றி பேசவுள்ளோம்.

மத்திய அரசால் மாநிலதிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை இன்னும் வழங்கவில்லை, இதை கேட்க வேண்டிய மாநில ஆளும் அரசு மௌனம் காக்கிறது. இது தொடர்பாகவும் திமுக தரப்பில் குரல் எழுப்ப உள்ளோம்.

நீட் தேர்வு ரத்து செய்ய கோரி நாளை திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்.” என்றார்.