Newsu Tamil
அரசியல் கல்வி தமிழ்நாடு செய்திகள் மக்கள்

ஒரே நாளில் 3 பேரை கொன்ற பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வருவதன் மூலம் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மருத்துவர் ஆவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு விடும். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல்வேறு போராட்டங்கள் தமிழக மக்களால் நடத்தப்பட்டது.

மத்திய அரசு பிடிவாதமாக நீட் தேர்வை கொண்டு வந்தது மருத்துவ கனவோடு படிப்பைத் தொடர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல் காரணமாக தற்கொலை முடிவை சமீபகாலமாக எடுத்து வருகின்றனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த ஜோதி துர்கா என்ற மாணவி நீட் தேர்வுக்கு தயாரான நிலையில் தற்கொலை செய்து இருக்கிறார். அதை தொடர்ந்து தர்மபுரி மாணவன் ஆதித்யா தற்கொலை செய்துள்ளார். பின்னர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மோதிலால் என்ற மாணவனும் தற்கொலை என்ற கொடும் முடிவை எடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கும் ஒன்றாகிவிட்டது. ஏழை எளிய கிராம புற மக்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் பெயரளவில் விளக்கம் கொடுத்து சமாளித்து வருகிறது.

எதிர்கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும், மாணவர் இயக்கங்களும் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மிகப்பெரிய எழுச்சிப் போராட்டங்களை நடத்தினால் மட்டுமே இதில் தீர்வை காண முடியும். மாறாக அடையாள போராட்டங்கள், அறிக்கைகளால் ஒன்றும் செய்திட முடியாது.