Newsu Tamil
ஆரோக்கியம் கொரோனா தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

கோவையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 5 பேருக்கு மீண்டும் பாதிப்பு

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய 5 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா வைரசின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பூரண குணமடைந்த பிறகே அவர்கள் வீட்டுக்கு அனுப்பப் படுகின்றனர். ஒரு முறை பாதிக்கப்பட்டவர் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதில்லை என்று சுகாதாரத்துறையினர் கூறி வருகின்றனர். இந்த சூழலில், கொடிசியா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் சுகாதார பணியாளர் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ஆனால், அவருக்கு தொற்று மீண்டும் உறுதியாகி உள்ளது. இதேபோல், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேருக்கும் மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது சுகாதாரத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.