Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள் பின்னணி பொருளாதாரம்

தமிழ் மட்டும் தெரிந்த என்னிடம் இந்தி பரப்ப சொல்கிறார்கள் – மத்திய அரசு அதிகாரி புகார்

சென்னை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன். இவர், ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தமிழ் ஊழியர்கள் மீது வலுக்கட்டாயமாக இந்தி திணிக்கப்படுவதாக உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “நான் சென்னை (புறம்) சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தில் நவம்பர் 2019 ல் இருந்து உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறேன். இங்கு நான் திறன் வளர்ப்பு மற்றும் ஹிந்தி (அலுவல் மொழி) பிரிவில் உதவி ஆணையராக உள்ளேன்.

ஹிந்தி பிரிவில் ஒரு உதவி ஆணையர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு ஆய்வாளர் ஆகியோர் பணிபுரிகின்றனர். வேறு ஒரு பிரிவில் பணியாற்றும் குமாஸ்தா ஒருவருக்கும் ஹிந்திப் பிரிவில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹிந்தி பிரிவின் பணி, மத்திய அலுவல் மொழியாக ஹிந்தியை பரப்புவதும் அதன் உபயோகத்தை கண்காணிப்பதும் ஆகும். இந்தப் பணியில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. உதவி ஆணையரான நானும், கண்காணிப்பாளர் சுகுமார் என்பவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆய்வாளர் ரஞ்சன் தய்யா மற்றும் குமாஸ்தா ஆகியோர் வடநாட்டைச் சேர்ந்த ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

ஹிந்திப் பிரிவில் கோப்புகளில் எழுதப்படும் குறிப்பு மற்றும் கடிதங்கள் ஹிந்தியில் இருக்க வேண்டும் என்பது சட்ட விதி. குறைந்தபட்சம் ஐம்பது விழுக்காடாவது ஹிந்தியை உபயோகப்படுத்த வேண்டும். உதவி ஆணையரான எனக்கோ அல்லது திரு.சுகுமாரன் கண்காணிப்பாளருக்கோ ஹிந்தி எழுதப் படிக்கத் தெரியாது. கோப்புகளில் எழுதப்படும் குறிப்பு மற்றும் கடிதங்களை ஆய்வாளர் ரஞ்சன் தய்யாவோ அல்லது குமாஸ்தாவோ ஹிந்தியில் எழுதுவார்கள். நாங்கள் அதில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாமல் கையெழுத்திடுவது வழக்கம்

தற்பொழுது இடமாற்றல் உத்தரவு எண். 31/2020 தேதி 28.08.2020 இன்படி ஆய்வாளர் ரஞ்சன் தய்யா அவர்கள் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தமிழ் தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமார் என்ற ஆய்வாளர் பொறுப்பேற்க உள்ளார். திரு.விஜயகுமார் அவர்களுக்கும் ஹிந்தி எழுதப் படிக்கத் தெரியாது. எனவே, தற்பொழுது ஹிந்திப் பிரிவில் உள்ள மூன்று அதிகாரிகளும் ஹிந்தி எழுதப்படிக்கத் தெரியாத தமிழ் அதிகாரிகள் ஆவர். எங்களால் கோப்புகள் மற்றும் கடிதங்களை ஹிந்தியில் எழுத முடியாது.

ஆணையர் அலுவலகத்தில் ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்ட ஒரு உதவி ஆணையர் பணியில் உள்ளார். இந்திப் பிரிவு பணியை அவருக்கு ஒதுக்காமல், எனக்கு ஒதுக்கியது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும். இதை என்னுடைய தமிழ் உணர்வை சிறுமைப்படுத்தும் நோக்குடன் செய்துள்ளார்.

மேலும் இந்த ஆணையர் அலுவலகத்தில் மூன்றில் இரண்டு பேர் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களை ஹிந்திப் பிரிவில் பணி அமர்த்தாமல் தமிழர்களை ஹிந்திப் பிரிவில் பணி அமர்த்தியுள்ளது சரியான செயலாகாது.

ஹிந்தி தெரியாத ஹிந்தி பிரிவில் வேலை செய்வதற்கு விருப்பமில்லாத என்னிடத்தில் அந்தப் பணியை கொடுப்பது என்பது என் மீது ஹிந்தி மொழியைத் திணிப்பதாக நான் கருதுகிறேன். ஹிந்தி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மட்டும் ஹிந்தி திணிப்பாக இருக்காது. இந்தியை பரப்ப வேண்டும் என்று விருப்பம் இல்லாத ஒருவரை நிர்பந்திப்பதும்கூட ஹிந்தித் திணிப்பே ஆகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு பிராமணன் இடத்தில் குரானையோ அல்லது பைபிளையோ கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தையோ அல்லது கிருத்துவ மதத்தையோ பரப்ப சொல்வததற்கு ஒத்ததாகும். எனவே, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள ஹிந்தி பிரிவிற்கு ஹிந்தி எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் அந்தப் பிரிவில் வேலை செய்வதற்கு நாட்டம் உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடும்படி மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் அவர்களைத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.