Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் குற்றம் தலையங்கம் மறைக்கப்பட்டவை

குழை நடுங்க வைக்கும் டெல்லி கலவரத்தின் உண்மை அறிக்கை… காரணம் யார் தெரியுமா?

தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் வன்முறையாளர்களுக்கு போலீஸ் உடந்தையாக இருந்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

அரசுசாரா மனித உரிமைகள் அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், டெல்லியின் வடக்குப் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது அங்கு நிகழ்த்தப்பட்ட கலவரம் குறித்து புலனாய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 53 பேர் உயிரிழந்த டெல்லி கலவரத்தில் போலீசார் கலவரக்காரர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் தாங்களே கலவரத்தில் ஈடுபட்டதாகவும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் குற்றம்சாட்டி உள்ளது. கலவரம் நடைபெற்று 6 மாதங்களைக் கடந்துவிட்டபோதிலும் டெல்லி போலீசாரின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை எந்த ஒரு விசாரணையும் தொடங்கப்படவில்லை என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டு உள்ளது.

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் உருவாகி உள்ள இந்த புலனாய்வு அறிக்கையின் முடிவு, கலவரத்தின் போது பல இடங்களில் போலீசார் வன்முறையாளர்களுடன் தோளோடு தோள் நின்றதாகவும் அப்பாவி மக்கள் மீது பெல்லட் குண்டுகளை கொண்டும் கண்ணீர் புகைக் குண்டுகளை கொண்டும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

கலவரத்தின் போது தனது வீட்டை இழந்த புரேகான் என்பவர் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் புலனாய்வில் கலவரத்தின் உச்ச நேரத்தில் வன்முறையாளர்கள் நடத்திய வெறியாட்டத்தை இவ்வாறு நினைவு கூறுகிறார் “அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். முதலில் எனது காரையும் பைக்கையும் தீவைத்து எரித்தனர். பின்பு எனது சகோதரனை கற்களைக் கொண்டு கடுமையாக தாக்கினர். போலீஸ் அவர்களுக்கு உடந்தையாக இருப்பதை அறிந்த நான் உயிருடன் தப்பிக்க வேண்டுமானால் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிவிடுவது தான் சிறந்தது என என் குடும்பத்தாரிடம் கூறினேன்.”

கலவரத்தில் வீட்டை இழந்த மற்றொரு நபரான கமலேஷ் “அந்த கும்பல் எங்கள் வீட்டின் பூட்டை உடைத்து முற்றிலுமாக எரித்துவிட்டது. 22 வருடங்களாக நாங்கள் வாழ்ந்துவரும் வீட்டில் அவர்கள் எதையும் மிச்சம் வைக்கவில்லை. கடின உழைப்பால் நாங்கள் கட்டி எழுப்பிய வீட்டை அவர்கள் தீக்கிரையாக்கிவிட்டார்கள். நாங்கள் காவல்துறையிடம் உதவி கோர முயன்று அவர்களை தொடர்பு கொண்டோம். அவர்கள் சட்டம் ஒழுங்கை சீர் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் இங்கு வந்து சேர மூன்று நாட்கள் ஆனது.” என ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

டி.ஆர்.பி. கான்வென்ட் பள்ளியின் பொருப்பாளர் ரூப் சிங், தான் பலமுறை காவல்துறையைத் தொடர்பு கொண்டபோதிலும் தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். பள்ளி சூறையாடப்பட்ட தருணத்தை அவர் இவ்வாறு விவரிக்கிறார் “அருகிலுள்ள ராஜ்தானி பள்ளியில் இருந்து 50, 60 ஆண்கள் கயிறுளை கட்டி எங்கள் பள்ளிக்குள் குதித்தனர். அவர்கள் நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர் என்று முழக்கமிட்டுக் கொண்டே பள்ளி நுழைவாயில் கதவை திறந்தனர். அவர்கள் என்னை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அங்கு ஒரு இந்து இருக்கிறான் அவனைக் கொல்லுங்கள் எனக் கூறினர்.” என தெரிவித்துள்ளார்.

வேட்டையாடிய கலவரக்காரர்கள், துணைக்கு நின்ற காவல் துறையினர்

கலவரம் நடைபெறும் இடத்தில் இருந்தபோதிலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராடியவர்களை கைது செய்வதில் மட்டுமே காவல்துறை முனைப்புகாட்டியதாகவும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைக் கூட பதிவு செய்ய காவல்துறை மறுத்துவிட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. உதவி கேட்டு காவல்துறையை அழைத்தவர்களிடம் “நீங்கள் விடுதலையைக் (ஆசாதி) கேட்டீர்கள், இப்போது உங்கள் விடுதலையை(ஆசாதி) எடுத்துக் கொள்ளுங்கள்” என காவல்துறை பதிலளித்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலவரப் பகுதிகளை பார்வையிட்ட பிறகும் வன்முறை கட்டுப்படுத்தப்படவில்லை என்கிறது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல். அஜித் தோவல் மக்கள் பாதுகாப்புக்கு உறுதி அளித்துவிட்டுச் சென்ற அடுத்த நாளே பாபு கான் என்பவரின் மகன் கலவரக் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாபு கானின் 2 மகன்கள் கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

கலரத்தின் போது தனியார் மருத்துவமனைகளளை உடனடியாக மூட நிர்பந்தித்ததாகவும் கலவரத்தில் காயமடைந்தவர்கள் உரிய சிகிச்சை பெற எந்த வழியும் இல்லாமல் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. மேலும், கலவரக்காரர்கள் சாலைகளை மறித்து ஆம்புலன்ஸ்களை கூட அனுமதிக்காததால் நிலைமை இன்னும் மோசமானதாகவும் இவற்றை காவல்துறையால் தடுக்க முடியாமல் போனதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷா மந்திர் கூறுகையில் “அழைப்புகளுக்கு போலீஸ் பதிலளிக்கவில்லை என்பதை நாங்கள் அறிந்தோம். ஒரு வழியாக எங்கள் வழக்கறிஞர் ஒருவர் நள்ளிரவில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டுக் கதவுகளை தட்டினார். நீதிபதியின் உத்தரவுக்குப் பிறகே மறிக்கப்பட்ட சாலைகள் திறந்துவிடப்பட்டன, மக்கள் மீட்கப்பட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் துன்புறுத்தல்கள்

போலீஸ் காவலின் போது முஸ்லீம்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் குற்றம்சாட்டி உள்ளது. போலீஸ் துன்புறுத்தலில் இருந்து உயிர்தப்பிய அதார் என்பவர் கூறுகையில், அவர் வீட்டுக்கு செல்லும் வழியில் போலீஸ் அவரிடம் நீ இந்துவா முஸ்லிமா என கேட்டதாகவும் அவர் தான் ஒரு முஸ்லீம் எனக் கூறியதும் போலீஸ் அவரை கைது செய்து வேனில் ஏற்றியதாகவும் அதில் ஏற்கனவே 25 பேர் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உங்களுக்கு விடுதலை வேண்டுமா என்று கேட்டு கேட்டு போலீஸ் அவர்களை தாக்கியதாகவும் தொடர்ந்து நான்கு நாட்கள் லத்திகளாலும் பெல்டாலும் அடித்து துன்புறுத்தியதாகவும் அதார் கூறி உள்ளார்.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தல்

டெல்லி கலவரத்தின் போது எழுந்த அனைத்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட அமலாக்கத்துறையின் மூலம் நடுநிலையான, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தி உள்ளது

டெல்லி கலவரத்தில் போலீசாரின் பங்கு என்ன என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.