Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் விளையாட்டு

கேல் ரத்னா விருது பெற்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு

தமிழகத்தை சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருதை காணொலி மூலம் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருது வழங்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்திர துருவ் பாத்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூரு, பூனே, சோனிபட் சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, டெல்லி, மும்பை, போபால் ஹைதராபாத், இடாநகர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து விழாவில் கலந்து கொண்டனர்.

முதலாவதாக இந்திய விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா-2020 விருது பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு வழங்கப்பட்டது. இந்திய மகளிர் அணி ஹாக்கி அணி கேப்டன் ராணிக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பாரா தடகள விளையாட்டு வீரர் ரஞ்சித்குமாருக்கு தயான்சந்த் விருதும் வழங்கப்பட்டது.

டேபிள் டென்னிஸ் வீராங்கனை மல்லிகா பத்ராவிற்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை தவிர மற்ற 3 பேருக்கும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

காணொலிக்காட்சி மூலம் இந்த விருதுகள் வழங்கப்பட்ட போது திரையில் விருது பெறும் நபர்கள் மற்றும் அவர்களுக்கான சான்றிதழ் திரையிடப்பட்டு விருது வழங்கப்பட்டது. முன்னதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ டெல்லியில் உள்ள தயான்சந்த் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே நேரத்தில் கேல்ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ.25 லட்சமாகவும், அர்ஜூனா விருதுக்கான பரிசுத்தொகை ரூ.15 லட்சமாகவும்
உயர்த்தப்படுவதாக கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பத்துக்கும் மேற்பட்டோர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு மற்றொரு நாளில் விருது வழங்கப்பட இருக்கிறது.