Newsu Tamil
இந்திய செய்திகள்

ஆந்திராவில் கொரோனா தனிமை முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் பலி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நோயாளிகளுக்காக சிகிச்சை அளிக்கக் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட முகாம் மற்றும் மருத்துவமனையாக செயல்பட்ட மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தினந்தோறும் 10,000 பேருக்கு மேல் ஒரு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 11 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேருக்கு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாளுக்கு நாள் ஆந்திராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களை தவிர கட்டணம் செலுத்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக அரசு பல்வேறு மருத்துவமனைகளை அங்கீகரித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் சார்பில் சமூக இடைவெளியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் பல மருத்துவமனைகள் தனியார் நட்சத்திர ஓட்டல்களை வாடகைக்கு எடுத்து மருத்துவமனையாக மாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கு எடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 40 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இதற்காக மருத்துவர்கள் செவிலியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை ஊழியர்களும் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் திடீரென இந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள முதல் தளத்தில் வரவேற்பு அறையில் இருக்கும் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பிடிக்க தொடங்கியது.

தீப்பிடித்த அடுத்த சில வினாடிகளில் புகை சூழத் தொடங்கியது. அதிகாலை நேரம் என்பதால் கொரோனா நோயாளிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நிலையில் என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் புகை சூழ்ந்து கொண்டதால் அதிலிருந்து தப்பிப்பதற்காக ஹோட்டலில் கண்ணாடி வழியாக வெளியே குதிக்க முயன்றும் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படக் கூடிய நிலையில் தீ விபத்து ஏற்பட்டு புகை சூழ்ந்து கொண்டதால் பலர் மூச்சு விட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் விஜயவாடா காவல்துறை ஆணையாளர் பத்தினி ஸ்ரீநிவாஸ் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தனியார் மருத்துவமனை நட்சத்திர ஓட்டலில் சிக்கிக்கொண்ட கொரோனா நோயாளி மற்றும் மருத்துவர்களை பத்திரமாக வெளியே மீட்டு அருகில் உள்ள இதர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: