Newsu Tamil
கல்வி தமிழ்நாடு செய்திகள் பின்னணி

காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10ம் வகுப்பு மாணவர்கள் பெயிலாம்…

பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் ஆல் பாஸ் என முதலமைச்சர் அறிவித்த நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலில் ஆப்செண்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து மூன்று முறை கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருந்த சுமார் 9 இலட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் ஆல்பாஸ் என கடந்த ஜூன் 9ம் தேதி முதல்வர் அறிவித்தார்.

காலாண்டு மற்றும் அரையாண்டில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் 80 மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 மதிப்பெண்களும் வழங்கப்படும் என முதலமைச்சர் தனது அறிவிப்பில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் முழுவதுமாக அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெறாமல் இருந்தாலும், அவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களான 35 மதிப்பெண் அளித்து பட்டியல் கொடுக்க வேண்டும் என்றும், எழுதாத தேர்வுகளுக்கு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை(ஆப்சென்ட்) என உள்ளீடு செய்து பட்டியல் கொடுக்க வேண்டுமெனவும் சுற்றறிக்கையில் கூறியிருந்தார்.

இதனடிப்படையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஆப்செண்ட் போடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் சில பாடங்களில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி கிடையாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தேர்வு எழுத இருந்த சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என தேர்வுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.