Newsu Tamil
உலக செய்திகள்

லெபனானை தொடர்ந்து UAE அஜ்மானில் பயங்கர தீ விபத்து… வானை சூழ்ந்த ராட்சத கரும்புகை

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மான் நகரில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அங்குள்ள புதிய தொழில்துறை பகுதியின் பொதுச்சந்தையில் மாலை 6.30 மணியளவில் ராட்சத தீ கொளுந்து விட்டெரிந்தது. இதனால் மிகப்பெரிய கரும்புகை விண்ணை சூழ்ந்தது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தீயை கட்டுப்படுத்த முடியாததால் அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு துபாய், ஷார்ஜா மற்றும் உம் அல் குவைன் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களின் உதவியுடன் 3 மணி நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த கோர தீ விபத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள், விலை உயர்ந்த பொருட்கள் என பல கோடி ரூபாய் மதிப்பில் சேதமடைந்தன. உயிரிழப்பு மற்றும் விபத்துக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை.