Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

சி.ஏ.ஏ.வுக்கு இன்னும் விதிகளே வகுக்கவில்லையாம்… டைம் கேட்கும் மத்திய அரசு

கடந்த 2019 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சி.ஏ.ஏ.) விதிகளை வகுக்க இன்னும் மூன்று மாதங்கள் தேவை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றப் பணிகள் குறித்த கையேட்டின் படி, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் சட்டம் இயற்றுவதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும் அல்லது கால நீட்டிப்பு தொடர்பாக நிலைக்குழுவை அணுக வேண்டும்.

“கடந்த பல மாதங்களாக அமைச்சகம் மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்ததால் விதிகளை வகுக்க கூடுதல் நேரம் கோரப்பட்டுள்ளது. விதிகள் விரைவில் வடிவமைக்கப்படும்.” என பாராளுமன்ற உயரதிகாரி கூறியுள்ளார்.

ஆறு மாத காலத்திற்குள் அமைச்சர்கள் / துறைகள் விதிகளை வகுக்க முடியாவிட்டால், அத்தகைய நீட்டிப்புக்கான காரணங்களைக் கூறி துணை சட்டக் குழுவிடம் கேட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பாராளுமன்ற விதிகள் கூறுகிறது.

விதிகள் வகுக்கப்படுகையில், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத அகதிகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின் மத நம்பிக்கைகளின் சான்றுகளை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், மத துன்புறுத்தல்களை எதிர்கொண்டு தப்பி ஓடிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்த, கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய 6 சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சட்டம், 2014 டிசம்பருக்கு முன் இந்தியாவில் நுழைந்தவர்களுக்கு பொருந்தும். ஆனால் இதில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை.

CAA மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட பின்னர், நாட்டில் கடும் எதிர்ப்புக்கள் எழுந்தன. CAA ஐ எதிர்ப்பவர்கள் இது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் அரசியலமைப்பை மீறுவதாகவும் வாதிடுகின்றனர். CAA, தேசிய குடிமக்களின் பதிவேடு NRC யில் இணைக்கப்பட்டு அதன் மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை குறிவைக்கும் நோக்கம் கொண்டது என்பது பெரும்பாலானவர்களின் வாதமாக உள்ளது.