Newsu Tamil
Headlines தமிழ்நாடு செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை

சாத்தான்குளம் சம்பவம் தெரியும்… போலீசால் உயிரிழந்த கறிக்கடை பாயை தெரியுமா?

காட்டுமிராண்டி போலீஸால் கொலை செய்யப்பட்ட பென்னிக்ஸும், ஜெயராஜும் நல்லவேளை எந்த சாதி, மத அடையாளங்களுக்குள்ளும் சிக்கவில்லை. அதனால் குறைந்தபட்சம் இப்போதாவது இந்த பொதுச்சமூகம் லாக்கப் கொலைகள் பற்றி பேசுகிறது.

ஏப்ரல் மாதம் ஊரடங்கில் காலை நேரம் தனது கறிக்கடை வாசலில் அமர்ந்திருந்த காரணத்திற்காக மதுரையில் அப்துல் ரஹீம் என்பவரை போலீஸ் கைது செய்து அடித்ததில் கொல்லப்பட்டார் (ஏப்ரல்). ஆனால் இந்த பொது சமூகம் பேசவில்லை. காரணம் செத்தவன் ஒரு முஸ்லீம் என்பதாலயா தெரியவில்லை!..

லாக்கப் கொலைகளில் அதிகம் கொல்லப்படுவோர் பட்டியலின மக்களும், இஸ்லாமியர்களும் தான். விசாரணை கைதிகளாகவே பல ஆண்டுகள் சிறையில் வைத்து துன்புறுத்தப்படுபவர்களும் இதே இஸ்லாமியர்களும் பட்டியலின இளைஞர்களும் தான்.

அப்போதெல்லாம் இந்த பாவப்பட்ட சமுதாயம் தனியாக ரோட்டில் நின்று கத்தி கத்தி ஓய்ந்து சென்றுவிடும். பேருந்தில், வாகனத்தில் போகும்போது பல முறை ஜன்னல் வழியாக பார்த்து இருப்பீர்கள். தொப்பி, தாடி வைத்த ஒரு கூட்டம், ஆங்காங்கே கருப்பு-வெள்ளை, சிவப்பு-பச்சை கொடிகளும் பிடித்த வண்ணம் அதிகார வர்க்கத்தை நோக்கி கண்டனங்களை முழங்கி கத்திக்கொண்டு இருக்கும். அதை பார்க்கும்போது உங்களது எண்ணம் என்னவாக இருந்திருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது…

நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் நினைத்திருங்கள். ஆனால் அந்த கூட்டம் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கோ, ஒரு நபருக்கோ, ஒரு ஊருக்கோ, ஒரு சமூகத்திற்கோ நீதி கேட்டு அரசை நோக்கி கண்டன குரல்களை எழுப்பிக்கொண்டு இருந்திருக்கும். அதில் பெரும்பாலானவை இதுபோன்ற லாக்கப் கொலைகளாக இருக்கலாம்.

அன்று லாக்கப்பில் கொல்லப்பட்ட அப்துல் ரஹீமிற்காக பொதுச்சமூகமாகிய நீங்கள் இதுபோல குரல் கொடுத்து இருக்கலாம். அப்துல் ரஹீமுக்கு நீதி கிடைத்திருக்கும் என்பதற்காக சொல்லவில்லை. அதற்கு முன்பும் பல நூறு அப்துல் ரஹீம்கள் இதேபோல் அதிகார வர்க்கத்தால் கொல்லப்பட்டு விட்டதால் இந்த சமூகத்திற்கு அதெல்லாம் பழகிவிட்டது. அப்துல் ரஹீமிற்கு பொதுச்சமூகம் நீதி கேட்டிருந்தால், இன்று பென்னிக்ஸும், ஜெயராஜும் கொல்லப்பட்டு இருக்கமாட்டார்கள் என்பதற்காக ஆதங்கமாக கூறுகிறேன்.

முஸ்லீம்கள் ஒரு நிரபராதிக்கு நீதி கேட்டு போராடும்போது, இன்னொரு பக்கம் பாஜக மற்றும் சங்கிகள், “முஸ்லீம்கள் தீவிரவாதிக்கு ஆதரவாக போராடுகிறார்கள், குற்றவாளிக்கு துணை போகிறார்கள்” என்று பல்வேறு பொய்களை அள்ளி வீசுவார்கள். அப்போதெல்லாம் அதை பொதுச்சமூகமாகிய நீங்கள் முழுமையாக நம்பாவிட்டாலும், “அவ்வாறு இருக்கலாமோ!” என்ற பலவேறு சந்தேகங்கள் உங்கள் மனதில் எழுந்து இருக்கும்.

அதே சங்கிகள் இன்றும் கொல்லப்பட்ட தந்தை-மகன் பென்னிசுக்கும், ஜெயராஜுக்கும் எதிராகவும், காவல்துறை செய்த கொடூர இரட்டை கொலையை சரியென்றும் பேசி வருவதை சமூக வலைத்தளங்களில் பார்த்து இருப்பீர்கள். இதில் எவ்வளவு அநியாயம் உள்ளதோ, அதே அநியாய பேச்சை தான் முஸ்லிம்கள் போராடும்போதும் சங்கிகள் பேசினார்கள்..

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள், தந்தை-மகன் இருவரும் கொல்லப்பட்டதால் அந்த குடும்பம் எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்து இருக்கும்?… அதே போன்ற இழப்பின் வலிகளை தான் ஒரு முஸ்லீம் இளைஞரோ, பட்டியலின இளைஞரோ அநியாயமாக லாக்கப்பில் கொல்லப்படும்போது அவர்களின் குடும்பங்கள் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.

“பாத்ரூமில் வழுக்கி விழுந்த இளைஞர்களுக்கு மாவுக்கட்டு போட்டார்கள் காவல்துறை” போன்ற செய்திகள் வரும்போது, கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாமல் அவற்றை ஆதரிக்காதீர்கள். அவற்றின் விளைவுகள் மோசமானது. எந்த நிரபராதிக்கும் அதே நிலை ஏற்படலாம். எல்லா குற்றங்களையும் தண்டிக்க சட்டம் இருக்கிறது. நீதிமன்றங்கள் இருக்கிறது. ஜனநாயகத்தில் ஒரு துறையின் அதிகாரத்தை இன்னொருவர் கையிலெடுப்பது மிக அபாயகரமனது என்பதை பொதுச்சமூகமாகிய நீங்கள் உணருங்கள். பாதிக்கப்படுபவர் யாராக இருந்தாலும் குரல் கொடுங்கள். அவர்களின் சாதி மதங்களை தேடிவிட்டு நமக்கென்ன என்று செல்லாதீர்கள். எல்லா வீட்டிலும் தந்தை-மகன்கள் இருக்கிறார்கள்.

– அன்பன் ரஹ்மான்.