Newsu Tamil
கல்வி தமிழ்நாடு செய்திகள்

10-ம் வகுப்பு மதிப்பீடு… முன் வைத்த காலை பின்வைத்த தமிழக அரசு

கொரோனா தீவிரமாக தமிழகத்தில் பரவி வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு பிறகு, தமிழக அரசு 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ததாக அறிவித்தது. இது தமிழகத்தில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் இருந்து 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேட்டிலிருந்து 20 சதவீத மதிப்பெண்களும் கொண்டு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து பல தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தவில்லை எனவும், மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்குவதற்கு ஒரு மாணவருக்கு ரூபாய் 50,000 வரை பணம் கேட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து புகார் கூறி வந்தது.

இக்குற்றச்சாட்டுகளுக்கு பிறகு அரசு தேர்வுத்துறை இயக்ககம் ஜூன் 17 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் “10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை முகப்பு தாள்களுடன் பாட வாரியாக பிரித்து வைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வருகிற 22-ஆம் தேதி முதல் 27ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், தேர்விற்கு வராத மாணவர்களின் விபரங்களை காரணத்துடன் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், மற்றும் இன்னும் பிற முக்கியமான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும், இதனையெல்லாம் முழு கவனத்துடன் பள்ளி தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டும்” எனவும் கூறப்பட்டது.

தேர்வுத்துறையின் உத்தரவையடுத்து பெரும்பாலான பள்ளிகள் விடைத்தாள்களை கேட்டும், அதை வைத்திருப்பவர்கள் பள்ளிகளுக்கு கொண்டுவந்து வழங்கவும் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அனுப்பியிருந்தனர். விடைத்தாள்கள் வைத்திருப்பவர்களுக்கு அதை ஒப்படைப்பதில் பிரச்சினை இல்லை என்றாலும், அதை பாதுகாப்பாக வைக்காத மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் தேர்வுத்துறையிடம் முறையிட்டன.

இதற்கு விளக்கம் அளித்துள்ள தேர்வுத்துறை அதிகாரிகள், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் இருந்தால் ஒப்படைக்கலாம் என்றும் விடைத்தாள்களை ஒப்படைப்பது கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அசல் மாணவர் முன்னேற்ற அறிக்கைகள் (Rank card) மற்றும் மாணவர்களின் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டு இருக்கும் அசல் மதிப்பெண் பதிவேடுகளைக் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.