Newsu Tamil
இந்திய செய்திகள் உலக செய்திகள் கொரோனா பின்னணி

மிரட்டி பிச்சை கேட்ட ட்ரம்ப்… பயந்து கொடுத்த மோடி

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகத்தின் வளர்ந்த வல்லரசு நாடு, உலகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் படைத்த நாடு என பெருமை பேசிக்கொண்டிருந்த அமெரிக்கா கொரோனா தடுப்பில் மற்ற நாடுகளை காட்டிலும் பின் தங்கி இருக்கிறது. ஆளுமை திறன் அற்ற, ஆயுதம், அதிகாரத்தை மட்டுமே நம்பிய நிர்வாகத்திறன் அற்ற வலதுசாரி சிந்தனை கொண்ட வியாபாரியான டொனால்டு ட்ரம்பின் கையில் சிக்கிக் கொண்டு அமெரிக்கா அல்லல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பில் மிகச்சிறிய நாடான கியூபா உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் வேலையில் அமெரிக்காவின் நிலையோ பரிதாபம்.

இந்த இக்கட்டான சூழலிலும் தனது நாட்டு மக்களை காக்க முயற்சிக்காமல் சீனா மீது பழிசுமத்துவதும், சீனர்களை இனரீதியாக சாடுவதையும் அவர் வேடிக்கையாக கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் ஹைடிரோக்சிகுளோரோகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரியை கொரோனா தடுப்புக்கு பயன்படுத்தலாம் என அவர் கூறினார் ட்ரம்ப். இதனை நம்பி அதனை உட்கொண்ட சிலர் அங்கு உயிரிழந்தனர். பலருக்கு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

ஹைடிரோக்சிகுளோரோகுயின் மலேரியாவிற்கான மருந்தாக கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது ஓரளவிற்கு கொரோனா நோயாளிகளின் நுரையீரல் பாதிப்பை கட்டுப்படுத்துகிறது என்பதை வூகானில் சீன விஞ்ஞானிகள் தான் முதன்முதலில் கண்டுபிடித்தனர். அது முழுமையான பார்வை இழப்பு உட்பட பல பயங்கரமான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்து என்றும் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் அதை உட்கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்..

இந்தியாவில் இரண்டு மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தைத் தயாரிக்கின்றன. மிக அண்மையில் இந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், அந்த மாத்திரியை இந்தியா தங்களுக்கு வழங்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார். டிரம்பின் மிரட்டலுக்குப் பிறகு தடையை பிரதமர் மோடி வாபஸ் பெற்றுள்ளார்.

அமெரிக்காவுக்கு இந்த மருந்தை கொடுப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இந்தியாவிடம் கையேந்தும் நிலைக்கு வந்த பிறகும் ரவுடியை போல் ட்ரம்ப் மிரட்டல் விடுப்பது தான் அராஜகம். அமெரிக்காவில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதற்கு நாம் மருந்து வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாலும், அது மிரட்டலுக்கு பயந்து வழங்குகிறோமா? அந்த மருந்துகள் இந்தியாவில் போதிய இருப்பில் உள்ளனவா? என்பதை மத்திய அரசு ஆராய்ந்து இந்த தடையை வாபஸ் பெற்று இருக்க வேண்டும். அதே வேலையில் நாகரீகமாக மருந்தை கேட்காமல் மிரட்டல் விடுத்த ட்ரம்புக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்.