Newsu Tamil
இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

இந்திய விமானப்படை கவனக்குறைவால் 6 வீரர்கள் பலி… 7 மாதங்களுக்கு பின் வெளியான செய்தி!

-file image

பிப்ரவரி 14 2019. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என கருதப்படும் இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்களும் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருந்தன. ஊடகங்களில் தேர்தல் செய்திகள் அனல் பறந்துகொண்டிருந்தன. நாடே மோடியா? ராகுலா? என பேசிக்கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் தான், தேர்தல் செய்திகளை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு நாட்டை புரட்டிப்போடும் சம்பவம் நிகழ்ந்தது. அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் நோக்கி துணை ராணுவப்படை வீரர்கள் 70க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது புல்வாமா என்ற இடத்தில் வெடிபொருட்களுடன் வந்த கார் மோதியது.

இந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இதனை நிகழ்த்தியது ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தான் என்றும், பாகிஸ்தானின் அறிவுறுத்தலின் பேரில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் இந்திய ராணுமும், அரசும் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை ஒருபுறம் பாகிஸ்தான் மறுத்துவிட்டாலும், இது இந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டது.

இந்த சூழலில் ஆளும் மத்திய பாஜக அரசு இதை தேர்தலுக்கான உத்தியாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். அதே வேளையில் நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்போம் என்ற வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த மோடி அண்ட் கோ பாஜக அரசு, இந்த புல்வாமா தாக்குதலால் விமர்சனங்களையும் சந்தித்தது. ராணுவ வீரர்களின் வாகனங்கள் செல்லும் பாதுகாப்பு நிறைந்த புல்வாமா பகுதியில் 350 கிலோ வெடிபொருட்களுடன் அந்த கார் எப்படி சென்றது? அதை அனுமதித்தது யார்? இதன் பின்னணியில் யார் உள்ளது? என்ற பல கேள்விகள் அப்போது ஊடகங்களாலும், பொதுமக்களாலும், எதிர்க்கட்சிகளாலும் எழுப்பப்பட்டன.

ஆனால், இவை எதற்கும் பதில் சொல்லாமல் மௌனம் காத்து வந்த மத்திய அரசும், ராணுவமும், தாக்குதல் நிகழ்ந்து 12 நாட்களுக்கு பிறகு, பிப்ரவரி 26-ம் தேதி, பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பாலகோட் என்ற இடத்தில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்துவிட்டதாகவும் அறிவித்தது. உடனடியாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டோம் என பதிவுகள் பறக்க தொடங்கின. இந்த தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பல முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டு மக்கள் தொடர்பு பிரிவின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர், 3 இடங்களில் அத்துமீறி நுழைந்த இந்திய விமானங்கள், விரட்டியடிக்கப்பட்டுவிட்டது என்றார்.

இதே போல், இந்திய விமானப்படையின் பாலகோட் தாக்குதலில், நான்கு பள்ளங்களும், ஒரு பாகிஸ்தானியருக்கு காயம் ஏற்பட்டதைத் தவிர, யாரும் இறக்கவில்லை என்று ராய்டர்ஸ், பி.பி.சி போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்கள் சேட்டிலைட் படங்களுடன் தெரிவித்தன. ஆனால், பாஜகவினரோ வடமாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் பாலகோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்றதாக கூறி வாக்கு சேகரித்தனர். அதற்கு நேர்மாறாக அப்போதைய மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா செய்தியாளர்களை சந்திப்பில், 300 தீவிரவாதிகளை நாங்கள் கொன்றோம் என சொன்னோமா? என செய்தியாளர்களிடமே எதிர்கேள்வி எழுப்பி அதிர வைத்தார். இப்படி பாலகோட் தாக்குதல் தொடர்பாக முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை அரசும், ஊடகங்களும் தெரிவித்து குழப்பமடைய செய்தன.

இது குறித்து அப்போது, முப்படை தளபதிகள் கூட்டாக அளித்த பேட்டியிலும், பாலகோட் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார் என தங்களுக்கு தெரியாது என்றனர். பாலகோட் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்க முயன்றதாகவும், இந்திய விமானப்படை அதற்கு பதிலடி தந்ததாகவும் தெரிவித்தனர். அதில் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் ராணுவம் வாங்கிய F16 ரக விமானம் வீழ்த்தப்பட்டதாகவும் முப்படை தளபதிகள் கூறினர். மேலும், அமெரிக்காவிடம் செய்த ஒப்பந்ததை மீதி பாகிஸ்தான் F16 விமானங்களை பயன்படுத்தியதாவும் இந்தியா குற்றம்சாட்டியது. இதையும் பாகிஸ்தான் மறுத்தது. இது குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் FOREIGN POLICY என்ற இதழ் அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தான் வசம் உள்ள F 16 ரக விமானங்கள் எத்தனை உள்ளது என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என்றும், இதனால் பாகிஸ்தான் அந்த விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்தது.

இந்த தாக்குதலின் போது தான் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கினர். பின்னர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இதன் பின்னர் அபிநந்தன் கைது, விடுதலை போன்ற செய்திகள் அடுத்த சில நாட்களுக்கு ஊடகங்களை ஆக்கிரமித்தன. முழு ஊடக வெளிச்சமும் அபிநந்தனுக்கு கிடைத்ததாலும், புல்வாமா தொடங்கி பாலகோட் வரை நீண்ட தகவல்களாலும், மிக முக்கியமான செய்தி ஒன்று மறைக்கப்பட்டது. ஆம், பாலகோட் தாக்குதலுக்கு மறுநாள் ஜம்மு, காஷ்மீரில் இந்தியா – பாகிஸ்தான் விமானப்படைகளுக்கு இடையே நிகழ்ந்த சண்டையில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்டதில் 6 இந்திய விமானப்படை வீரர்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இது அப்போது ஊடகங்களில் பெரிதுபடுத்தப்படவில்லை.

இந்நிலையில் தான், அந்த ஹெலிகாப்டரை சுட்டது இந்திய விமானப்படை தான் என தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்துள்ளதை அடுத்து, அக்டோபர் 4-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர், விமானப்படை மிகப் பெரிய தவறு செய்துவிட்டது என்றார். அதை தாங்கள் ஒப்புக் கொள்வதாகவும், இதுபோன்ற தவறை இனி செய்ய மாட்டோம் என்றும் கூறினார். இந்திய விமானப்படை ஏவுகணையே, இந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,2 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விமானப்படை தளபதி விளக்கமளித்தார்.

தேர்தல் நேரத்தில் நிகழ்ந்த புல்வாமா, பாலகோட் தாக்குதலின் போது விழுந்த பல மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ தொடங்கியுள்ளன. அதில் மிகப்பெரிய முடிச்சாக இதுபார்க்கப்படுகிறது. இந்திய விமானப்படை தாக்குதலில் 6 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது கவனக்குறைவாக நடந்ததா, இல்லை அதன் பின்னால் வேறு ஏதேனும் மர்ம முடிச்சு உள்ளதா என்பதை காலம் நம் கண் முன் காட்டும்.

நியூசு தமிழின் சமூக ஊடகங்களில் இணைந்திருங்கள்:

%d bloggers like this: