Highlights

Highlights

பேட்ட vs விஸ்வாசம் - யாருக்கு அடி?

Friday, January 11, 2019

/ by U Editorial
சினிமா – ஏறத்தாழ 75 ஆண்டுகாலம் தமிழக மக்கள் மனதில் ஆணித்தரமாக பதிந்த ஒன்று. சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அரசின் குறைகளையும் துடைக்க சினிமா நடிகர்கள் தான் தீர்வு என மக்களின் மனதில் ஒரு மாயை உருவாகுவதற்கு சினிமாவும் மக்களும் பிண்ணிப்பிணைந்திருப்பதை ஒரு காரணமாக கூறலாம். சினிமாவின் ஆரம்ப காலம் முதலே பிரபலமான நடிகர்களை முதல்வராக்குவது கபடமற்ற மனதுடைய நம் தமிழக மக்களின் வாடிக்கையாகிவிட்டது. இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் தனக்கு பிடித்தமான நடிகர்களின் தீவிர ரசிகர்களாக இருக்கும் பெரும்பாலானவர்கள் பாலபிஷேகம், கட் அவுட் கலாச்சாரம் என திருவிழாக்களை போல் கொண்டாடுவார்கள்.

நடிகர்களின் ரசிகர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலனோர் படித்த அல்லது படிக்காத ரசிகர்களின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. இன்னும் சில உதாரணங்களையும் சுட்டிக்காட்டலாம்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் எம்,ஜி.ஆர் சண்டையிடும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருப்பார். அப்போது எம்.ஜி.ஆரின் கையில் இருந்த கத்தி தவறி விழுந்து விடும். படத்தை பார்க்க ஆரம்பித்த முதலே விசில் பறக்க ஆவலோடு குதித்துக்கொண்டிருந்த வடிவேலு எம்.ஜி.ஆரின் கத்தி கீழே விழுந்தவுடன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தலைவா இந்தா பிடி தலைவா என தூக்கி தொலைக்காட்சியில் எறிவார். அப்போது அரிவாள் விழுந்து தொலைக்காட்சி சுக்கு நூறாகி விடும்.

இந்த காட்சியை படிக்கும்பொழுதே உங்களுக்கு சில விஷயங்கள் மனதில் உதித்திருக்கும். தெளிவாக கூறவேண்டுமெனில் அன்று முதல் இன்று வரை பெரும்பாலான ரசிகர்களின் மடமைத்தனம் முற்றிய நிலையிலேயே காணப்படுகிறது. அனுதினமும் விவசாயிகளின் மரணமும், போராட்டமும் அவர்களின் காதில் விழுந்தாலும் அது ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்கிறது. ஆனால் ஒரு படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட முதலே ரசிகர்களின் ரகளைகள் தொடங்குகிறது. அதை ஊடகங்கள் பின்னோக்கிச் சென்று விளம்பரம் ஏற்படுத்துவதற்காக ரசிகர்கள் செய்யும் அளப்பறைகளும் ஏராளம்.

இதனால் ஊடகங்களும் ரசிகர்கள் செய்யும் நூதன மடமைத்தனத்தை பெரிய செய்தியாக்கி பல அத்தியாவசிய செய்திகளை துணுக்குச் செய்தியாக மாற்றுகிறது.
முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக பணம் கேட்டு கொடுக்க மறுத்த தூங்கி கொண்டிருந்த தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் வேலூரில் அறங்கேறியதை நாம் அறிந்திருப்போம். தன் தலைவன் மீதான எல்லை மீறிய பாசத்தால் தனது தந்தையை கொல்லும் அளவிற்கு 20 வயது மாணவன் செல்கிறான்.
இன்னொருபுறம் அனுமதிக்கப்படாத மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் ராட்சச பேனர்கள் வைக்கும் கலாச்சாரமும் இந்த தமிழக மண்ணில்தான் அதிகம் அறங்கேறுகிறது.

அஜித் படத்திற்காக பிரம்மாண்ட பேனர் வைக்க 6 இளைஞர்கள் ஏறியபொழுது சாரம் சரிந்து படுகாயம் அடைந்த சம்பவமும் அறங்கேறியிருக்கிறது. இப்படி பிரபலமான நடிகர்களின் படம் வெளியாகும் காலங்களெல்லாம் ஒவ்வொரு அசம்பாவிதங்கள் அறங்கேறுவது சாதாரணமாகிவிட்டது.
பேட்ட- விஸ்வாசம் என இரு பெரும் நடிகர்களின் படம் வெளியாகிய பொழுதுதான் ஒரு புறம் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக எலிக்கறியும் பாம்புக்கறியும் தின்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் அது எத்தனை ரசிகர்களுக்கு தெரியும்?
அதுமட்டுமின்றி உன் தலைவன் பெரியவனா என் தலைவன் பெரியவனா என்ற பகைமையால் கத்திக்குத்து வரை சென்ற பல பிரச்சனைகளும் இந்த இரு பெரும் நடிகர்களின் படத்திற்காக தான் அறங்கேறியுள்ளது. சினிமா என்பது மக்களிடம் சமூக பிரச்சனைகளை எடுத்துகூறும் ஒரு ஊடகமாக பயன்படுத்துவது அறிதான ஒன்றாகவே உள்ளது. வெறும் கேளிக்கைக்காவும், பொழுதுபோக்கு கூத்திற்கும் பயன்படுத்துவது அதிகமாகவே காணப்படுகிறது.
முதல் நாள் கலெக்சன் எவ்வளவு என ஆவலோடு பார்த்து அதை பீற்றிக் கொள்ளும் இந்த ரசிகர்களுக்கு மத்தியில் தான்.. விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்துகின்றனர்.

திரையில் தெரியும் ஒரு மாயையால் நிஜத்தில் போராடும் மனிதர்கள் நடிகர்களாகவும் தேச விரோதிகளாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
அரசின் ஒடுக்குமுறைகளால் சமூகத்தின் அவலங்களை எடுத்து கூறும் சமூக ஆர்வலர்களும் நசுக்கப்படுகிறார்கள்.
எனவே திரையில் பணத்திற்காக நடிக்கும் மனிதர்களை தவிர்த்து நிஜ வாழ்க்கையின் ஹீரோக்களை சரியான முறையில் அறிந்துகொள்ளும் வரையில் கோட்டையை ஆள நினைக்கும் பேட்டையும், பணவாசத்தில் தவழும் விஸ்வாசமும் மனிதர்களின் உயிர்களை குடிக்கும் என்பதில் ஐயமில்லை.


-கிளுர் முஹம்மது.அ

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
Designed by Dot colors