குரங்கு கையில் பூமாலை - பாதாளத்தில் இந்திய பொருளாதாரம் (தொடர்-2)

modi-economy-series-2

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் ஒரு வகையான பொருளாதார மந்த நிலையல்ல பொருளாதாரம் இயங்காத, அச்சமூட்டுகின்ற நிச்சயமற்ற தன்மை, அன்றாடம் கூடிக்கொண்டு இருக்கும் எண்ணெய் விலை, மதிப்பிழக்கும் நாட்டின் செலவாணி, வீழ்ச்சியடையும் முதலீடுகள், பதட்டமான சூழலில் பணியாற்றும் வங்கித்துறைகள் ஆகிய  காரணிகள் இந்தியப் பொருளாதரத்தை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் தள்ளி இருக்கின்றன.

ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் பங்குகொள்ளும் நகைச்சுவைக் காட்சியில் ஒரு மனிதனுக்கு கண் சரியாகத்தெரியாது, காது கேட்காது, காலில் ஆணி, கையில் வாதம், புட்டத்தில் மூலம், உள் மூலம் ,வெளிமூலம் ஆகிய அனைத்துவியாதிகளும் இருப்பது போல இந்த நாலரைஆண்டுக் காலத்தில் இந்தியப் பொருளாதாரத்துக்கு இவ்வளவு வியாதிகளும் ஏற்பட்டுவிட்டது. இவற்றில் பல வியாதிகள் தொத்து வியாதிகள்; சில வியாதிகள் தவறான  மருந்தை உட்கொண்டதால் ஏற்பட்ட வியாதிகள்.

 சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதார சுனாமியிலும் தொடர்ந்து அச்சமூட்டும்  உள்நாட்டுப் பொருளாதார சூறாவளியிலும் சிக்கி இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. எண்ணெய் மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு ஆகிய பிரச்சனைகளுடன் Infrastructure Leasing & Financial Services (IL&FS) அமைப்பில் எழுந்துள்ள சிக்கல், இந்தியா மீதான நாணயம், நம்பிக்கை ஆகிய அடிப்படைத்தன்மைகளின் மீது கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

 (IL&FS) ல் எழுந்துள்ள சிக்கலுக்குப் பிறகு நாட்டின் நிதியமைச்சரை சந்தித்து விளக்கம் பெற, மும்பையைச்  சேர்ந்த முதலீட்டாளர்களின் அமைப்பு புது டில்லிக்குப் படையெடுத்தது. ( IL&FS) என்பது ஒரு அரசு பெற்றெடுத்த  நிறுவனம்.  ஆனால் அந்த நிதி நிறுவனத்துக்கு யாரை, எதற்காக , ஏன் நம்ப  வேண்டும் என்ற அடிப்படை பயிற்சி இல்லை. வழக்கமாக பதினன்ந்து நிமிடங்கள் ஒரு வாடிக்கையாளரிடம் பேசுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் நிதிநிறுவனங்களை சந்திப்பதற்காக வரும் சிறு முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்த, வாக்குறுதிகளை உறுதிப் படுத்த நீண்ட  நேரம் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க  வேண்டி இருக்கிறது என்று ஒரு பெரும் முதலீட்டாளர் அலுத்துக் கொள்கிறார். இந்தியா  இந்தச்சூழலில், பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தீயை அணைக்க போரிடும் அவசர நிலையில் போராடுவது போல நிலையில் இருக்கிறது என்கிறார். இதன்காரணமாக, எதிர் வரும் தேர்தலுக்கு முன்பாக மக்களின் நம்பிக்கையை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பதே அரசின்  கவலையாக இருக்கிறது.

பல அமைப்புகளின் கோரிக்கைகளுக்குப் பிறகு நின்று உட்கார்ந்து எழுந்து மாநிலத்தேர்தல்களை மனதில் வைத்து  எண்ணெய் விலையின் உற்பத்தி வரியில் மத்திய அரசின் சார்பாக சிறு சலுகையை அறிவித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அரசின் பொருளாதாரத்திட்டங்கள காக்கைக்கும் தன் குஞ்சு போன் குஞ்சு என்ற அடிப்படையில் தற்காத்துப்  பேசினார். அப்போது எந்த அரசும் தனது மக்களின் நலனை கவனிக்காமல் இருக்க இயலாது என்று உதட்டளவு பேசினார். கடந்த நான்கு நிதிநிலை அறிக்கைகளில் வரி செலுத்தும் நடுத்தர வர்க்க மக்களுக்காக நேரடி வரிகளில் சில சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்ததை மறுக்க இயலாது. அதே போல எண்ணெய் விலை வரம்பின்றி ஏறிக்கொண்டிருக்கும் வேளையில் நிதியமைச்சர் அறிவித்த  இரண்டு ரூபாய் சலுகை , யானைப்பசிக்கு சோளப் பொறி என்ற நிலையில் மட்டுமல்லாமல் நிதியமைச்சர் முன்வைத்த மாநிலங்களும் இந்த விலைகுறைப்பில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற  கோரிக்கை பாஜக மாறும் அதன் கூட்டணிக் காட்சிகள் ஆளும் மாநிலங்களில் தவிர வேறு மாநிலங்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

அரசின் அந்த விலைக் குறைப்பாவது பொருளாதாரரீதியில்  அறிவு பூர்வமானதா ? என்று கேள்வியெழுப்பினால் இல்லை என்ற பொருளியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பொருளியல் வல்லுனர்கள் , நிதியமைச்சர் அறிவித்த விலைக்குறைப்பு பொருளாதார் ரீதியாக ஒரு தவறான  காய் நகர்த்தல் என்று கூறுகிறார்கள்.  

இவ்வாறு தவறான காய் நகர்த்தல் என்று கூறப்படுவதற்கு காரணமாக அவர்கள் குறிப்பிடுவது இந்த விலைக்குறைப்பு எண்ணெயின் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்குRs 1,40,000 கோடியும் அரசுக்கு Rs. 70,000 – 80,000கோடியும் அரசும் பங்குதாரராக இருப்பாதால் இழப்பை ஏற்படுத்தும் என்று கணக்கிடுகிறார்கள். இந்த உற்பத்திவரிக் குறைப்பினால்  அரசு தனது வருவாயிலிருந்து வருமானத்தை இழக்கிறது.  இந்தக் கருத்தை  சிடி பேங்க் உடைய பொருளியல் குறிப்பு சுட்டிக் காட்டுகிறது.

பொருளாதாரக் கப்பல் நடுக்கடலில் தள்ளாடிக் கொண்டு இருக்கும்போது அதை எந்த திசையில் செலுத்த வேண்டும் என்கிற கொள்கை முடிவுகளில் அரசுத்துறைகளின் நிதி அமைச்சகத்துக்கும் மத்திய வங்கிக்கும் இருக்க வேண்டிய ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் இல்லாமல் போய்விட்டதாக இந்த நிலை விமர்சிக்கப் படுகிறது.இத்தகைய நிர்வாக முடிவு வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்துவதற்கோ  நாட்டை விட்டு புறமுதுகிட்டு ஓடும் முதலீடுகளை திருப்பிக் கொண்டு வருவதற்கோ ஒரு வகையிலும் உதவாது. மாறாக, அழுத்தத்தைக் குறைப்பது என்ற பெயரில் எடுக்கப்பட்ட  அந்த நடவடிக்கை, நிதி மற்றும் எண்ணெய் துறைகளில் இப்போது இருக்கும் அழுத்தத்தை கூட்டுவதற்கே உதவும் என்று IMF & World Bank  நிறுவனங்களின் பொருளியல் துறையின் செயலாளர் திரு. சுபாஷ் கர்க்பாலித்தீவில் நடைபெற்ற ஒரு வருடாந்திரக் கூட்டத்தில் கூறுகிறார்.    ( Ref: India To-day )

எண்ணெய் விலைக்குறைப்பு என்கிற  ஊருக்கு உதவாத நாடகத்தின் காட்சிகளால் நாட்டுக்கு நன்மை ஏதும் இல்லை என்பதே நாம் உணர வேண்டியது. பல மாநிலங்கள் இந்த விலைக்குறைப்பை சீண்டக்கூடத் தயாராகவில்லை என்பது மத்திய நிதி அமைச்சருக்கும் அவரை வைத்து வேலை வாங்கும் பிரதமருக்கும் பெரும் அவமானமாகும்.

அரசுத்துறை வங்கிகளின் நிலை என்ன?

( தொடரும்) 

ஆக்கம்: இப்ராஹிம் அன்சாரி

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget