Highlights

Highlights

சுந்தரப்பாண்டியன் படமும், பொறியியல் மாணவன் படுகொலையும்!

Friday, January 11, 2019

/ by U Editorialதஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான 20 வயதான முன்தாசர், பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில், திருமங்கலக்குடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். அதன்பின் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக அவர் தனது தாய்க்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
அதனைதொடர்ந்து இரவு எட்டு மணியளவில், அவரின் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

 அதில் முன்தாசரை கடத்தியுள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் தரவேண்டுமெனவும் ஒரு நபர் மிரட்டியுள்ளார். முன்தாசர் போனிலிருந்து வந்த அழைப்பு திருபுவனம் பகுதியிலிருந்து வந்ததை போலீசார் கண்டறிந்தனர். இந்த நிலையில் நேற்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றின் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், முன்தாசரின் சடலம் கிடந்துள்ளது. மாணவரின் பிரேதத்தை கைப்பற்றிய விசாரணை மேற்கொண்ட போலீசார் முன்தாசரின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் தெரிவித்த தகவல் பகரை திடுக்கிட வைத்தது. “முன்தாசரின் நண்பர்களான நியாஸ் அகமது, முகம்மது ஜலீல், சலீம் ஆகிய மூவரும் ஒரு பெண்ணை காதலித்த நிலையில், அந்தப் பெண் முன்தாசரை காதலித்ததால் பொறாமை அடைந்த மூவரும் திட்டமிட்டு அவரை வர வைத்து கழுத்தறுத்துக் கொன்றுள்ளனர். பின்னர், அவரது தாய்க்கு போன் செய்து 5 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தல் நாடகம் ஆடியுள்ளனர்.

ஆசிரியர் பார்வை:
சசிக்குமார் நடித்த சுந்தரபாண்டியன் என்ற படத்தில் காதல் விவகாரத்தில் ஹீரோவை அவனது 2 நண்பர்கள் திட்டமிட்டு கடத்தி கொலை செய்ய முயல்வார்கள். அந்த படத்தில் வருவதை போல் தான் கும்பகோணம் அருகே பொறியியல் மாணவனை அவனது நண்பர்களே காதல் விவகாரத்தில் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.

20 வயது கூட ஆகாத மாணவர்கள் நண்பனையே கொலை செய்துவிட்டு அதை திசை  திருப்புவதற்காக கடத்தல் நாடகம் போட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த யோசனையை கொடுத்தது சினிமாக்கள். திரில்லர், கிரைம் என்ற பெயரில் வரிசை கட்டி நிற்கும் படங்களில் கடத்துவது எப்படி? கொலை செய்துவிட்டு தப்பிப்பது எப்படி? தொழில்நுட்ப கருவிகளை தவறாக பயன்படுத்துவது எப்படி? என அனைத்தும் தத்ரூபமாக காட்சிபடுத்தப்படுகிறது.

இந்த படத்தை பார்க்கும் சிலர் அதிலிருந்து விழிப்புணர்வு அடைந்தாலும், பலருக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இது போன்று நாமும் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதன் விளைவு தான் சினிமா பாணியில் கொலை, கொள்ளை, பலாத்காரம், கடத்தல் என செய்திகள் நாள்தோறும் அணி வகுக்கின்றன.  எனவே இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு இந்த விசயத்தில் சமூக அக்கரை மிகவும் அவசியம்.

- நூருல் இப்னு ஜஹபர் அலி

No comments

Post a Comment

Don't Miss
© all rights reserved
Designed by Dot colors