டெல்டா மாவட்டங்களை கஜா என்னும் கோரப்புயல் தாக்கி 50 நாட்கள் நெருங்கிவிட்டன. ஆனால், அதன் கொடும் தடங்கள் இன்னும் மறைந்தபாடில்லை. நாகை மாவட்டம் புஷ்பவனத்தில் புயலால் சாய்ந்த மரங்கள் அதே இடத்தில் அப்படியே கிடக்கின்றன. மரம் விழுந்த கவலை ஒரு புறம், அவற்றை அகற்ற பணமில்லை என்ற கவலை மறுபுறம் என விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இந்த நிலையில் தான் புஷ்பவனம் பகுதி விவசாயிகளின் துயர் துடைக்க சமூக ஆர்வலர்கள் களமிறங்கியுள்ளனர். இன்ஸ்பையர் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், திருப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் மத்திய அரிமா சங்கத்தின் உதவியுடன் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. 10 நாட்களில் 17 ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயிரம் ஏக்கர் மரங்களை அகற்றும் குறிக்கோளுடன் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதுவரை 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறிய தொழிலதிபர் பாலச்சந்திரன், மற்ற தொழிலதிபர்களும், தன்னார்வலர்களும் இது போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் மனச்சோர்வு அடைந்துள்ளதாக கூறும் இன்ஸ்பையர் நிறுவன இயக்குநர் ரேவதி, ஊருக்கே சோறு போட்ட விவசாயிகளை காப்பாற்றி மறுவாழ்வுக்கு உதவுவது ஒவ்வொருவரின் கடமை என்கிறார்.
ஊர் கூடி தேரை இழுப்பது என்ற முதுமொழிக்கு ஏற்ப தொழிலதிபர்கள், பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுத்து மக்களின் வாழ்வில் நம்பிக்கை என்னும் ஒளியை ஏற்படுத்த முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
-நூருல் அஹமது.
Post a Comment