திருவாரூர் இடைத்தேர்தல் - சிக்கல் யாருக்கு?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தொகுதியை திமுக தக்கவைக்குமா? டிடிவி தினகரன் தனது சொந்த மாவட்டத்தில் தனது பலத்தை காட்டுவாரா? ஆர்.கே.நகரில் தோல்வியடைந்த அதிமுக இதில் வெற்றி பெற்று தனது அரசியல் எதிர்காலத்தை பிரகாசமாக்குமா? என பல கேள்விகளுக்கு இந்த தேர்தல் முடிவுகள் விடையாக இருக்கும். எனவே இதனை குறிவைத்து அனைத்து கட்சிகள் தீவிரமாக தேர்தல் களத்தில் குதித்துள்ளன.

1962ம் ஆண்டு, முதன் முதலாக சட்டசபை தேர்தலை சந்தித்த திருவாரூரில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதன்பின், 1967 மற்றும் 80, 84, 89, 91 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது.
1971, 77, 96, 2001, 2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது.

தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, 303 வாக்குச்சாவடிகளை உள்ளடிக்கிய திருவாரூர் தொகுதியில், மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 169 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேரும் உள்ளனர்.

திருவாரூர் வட்டம், குடவாசல் வட்டம், கூத்தாநல்லூர் நகராட்சி, நீடாமங்கலம் தாலுக்கா, கொரடாச்சேரி பேரூராட்சி மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை திருவாரூர் சட்டமன்ற தொகுதி உள்ளடக்கியுள்ளது. கடைசியாக நடைபெற்ற 2 தேர்தல்களிலும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றிகளை பெற்றார்.

2016 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வத்தை விட 67 ஆயிரத்து 212 வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார். திருவாரூரில் கடந்த முறை திமுக பெற்ற பிரம்மாண்ட வெற்றியை இம்முறை பெறும் என உறுதியாக கூற முடியாது. காரணம், மூத்த அரசியல் தலைவரான கருணாநிதிக்கு உள்ள ஆதரவை மற்றவர்கள் பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதே போல், திருவாரூர் மண்ணின் மைந்தரான டிடிவி தினகரனின் அமமுக கட்சியும் அங்கு போட்டியிடுவதால், அதிமுக, திமுக வாக்குகள் கணிசமாக பிரியும் வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

மறைந்த முதலமைச்சரின் ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று அவரின் கவுரவத்தை காக்க வேண்டிய கட்டாயத்துக்கு அதிமுக எப்படி ஆளானதோ, அதே போல், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று அவரது கவுரவத்தை காக்க வேண்டிய கட்டாயத்துக்கு திமுக ஆளாகியுள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், செந்தில்பாலாஜி ராஜினாமா என அடிமேல் அடிவாங்கிய டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் போல் இதில் வெற்றி பெற்று தன் சொந்த மண்ணில் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு போதிய எதிர்ப்பு தெரிவிக்காதது, அண்மையில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பு போன்றவற்றால் மக்கள் மனதில் ஏற்பட்ட பாதிப்புகளை கடந்து அங்கு ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

எது எப்படியோ, எந்த தடையும் இன்றி திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறுமாயின் ஆண்டின் முதல் மாதமே அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது. அதுமட்டுமின்றி, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

- நூருல் அஹமது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget