தாய்லாந்தில் கடந்த ஜுன் மாதம் கால்பந்து அணி ஒன்று குகையினுள் சிக்கியது. 12 சிறுவர்கள் ஒரு பயிற்சியாளர் என மொத்தம் 13 பேரை மீட்பதில் தாய்லாந்து மட்டுமல்லாது சர்வதேச மீட்புக் குழுவும் விரைந்து செயல்பட்டது. ஊடகங்கள் வாயிலாக ஒட்டுமொத்த உலகின் பார்வையும் தாய்லாந்தை நோக்கி இருந்தது. எப்படியோ நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அனைவரும் பத்திரமாக குகையிலிருந்து தப்பித்தனர்.
ஆனால் இதைவிட ஆபத்தான சம்பவம் இந்தியாவின் மேகாலயாவில் அரங்கேறியுள்ளது. மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலைப்பகுதியில் உள்ள சுரங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி 15 தொழிலாளர்கள் நிலக்கரி எடுப்பதற்காக 370 அடி ஆழ சுரங்கத்தினுள் சென்றனர். அருகில் உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குகைக்குள் தண்ணீர் புகுந்தது.
மேகாலயாவில் நிறைய சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் செயல்படுகின்றன. அதில் இந்தச் சுரங்கமும் ஒன்று. மிகவும் குறுகலான பாதை உடையதால் இது ‘எலிப் பொறி’ சுரங்கம் என அழைக்கப்படுகிறது.
ஒரு மாதம் கடந்தும் இதுவரை தொழிலாளர்களின் நிலைமை என்னவானது என்று யாருக்கும் தெரியவில்லை..!
தேசிய மீட்புப்படையினர் முகாமிட்டு அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.
ஆபத்தான சுரங்கத்தை ஏற்கனவே அரசு தடை செய்திருந்தது. இருப்பினும் சில பண முதலைகளின் சுயநலத்தால் இதுபோன்ற சட்டவிரோத செயல்பாடுகள் நடந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே முறையான பாதுகாப்பின்றி இயங்கிய குகைகளை மூட தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது
உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு அமைச்சர்களும் அவர்களது உறவினர்களுமே நிலக்கரி எடுப்பதில் ஆர்வம் காட்டியதாக மேகாலாயா அரசு அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.
குறுகிய நிலக்கரி சுரங்கங்கள் மிக மிக ஆபத்தானவை. இதில் வேலை செய்வதற்கு பெரும்பாலும் வெளியில் இருந்து ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வேலை. அதனால் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. குகையில் எது வேண்டுமேயானாலும் நடக்கலாம். திடீரென மண்சரிவு ஏற்பட்டு குகையே மூடிவிடும்.. அதோடு சேர்த்து வாழ்க்கையும் முடிந்து விடும்.
அப்படி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு அதில் இருந்து தப்பித்து உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்தவர்களும் ஏராளம்..
சுரங்கத்தின் அருகிலேயே ஆறு ஓடுவதால் ராட்சச பம்புகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றி முடிந்தபாடில்லை.. லட்சக்கணக்கான லிட்டர்களை வெளியேற்றிய பின்பும் தண்ணீர் அளவு குறையவே இல்லை. ஆறுக்கும் சுரங்கத்திற்குமான இணைப்பு இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கியது.
தண்ணீர் எத்தனை அடி உள்ளது என்பதை அளவிட முடியவில்லை. தொழிலாளர்கள் இருக்கும் இடமும் தெரியவில்லை.
தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்க இந்தியாவும் அதிகம் உதவியது. குகையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற கிர்லோஸ்கர் நிறுவனத்தின் ராட்சச பம்பு முக்கிய பங்கு வகித்தது. தனி விமானம் மூலம் கிர்லோஸ்கரின் எந்திரங்கள் வேகமாக தாய்லாந்து பறந்தது.
தாய்லாந்துக்கு காட்டிய ஆர்வம் மேகலாயவுக்கு காட்டவில்லை என மத்திய அரசு மற்றும் கிர்லோஸ்கர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மீட்புப் பணியை கைவிட்டு விடலாம் என சிலர் புலம்பிய போது அதிர்ஷ்டத்தை நம்பி தொடருவோம் என நம்பிக்கையூட்டியுள்ளது உச்சநீதிமன்றம்..!
மாதம் இரு முறை ராக்கெட் அனுப்புகிறோம், ₹3,000 கோடிக்கு உலகின் மிக உயரமான வைத்துள்ளோம் என பாராட்டிய மத்திய பாஜக அரசு சுரங்கத்தில் சிக்கிய சொந்த நாட்டு மக்களை ஒரு மாதமாகியும் மீட்க முடியாமல் திணறுவது வெளிநாடுகளின் பார்வைக்கு வெளிநாட்டு விநோதமாக பார்க்கப்படுகிறது.
- நியூசு செய்திக்குழு
Post a Comment